கோவை: கோவையில் நாளை (ஏப்.18) ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
வாக்குப்பதிவு தினம் நெருங்குவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கோவையில் அடுத்தடுத்து பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
11 தொகுதி வேட்பாளர்கள்
கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், 9-ல் அதிமுக வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் (கோவை வடக்கு) பாஜக வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
அவிநாசி தொகுதியின் குறிப்பிட்ட பகுதிகள், கோவை மாவட்டம் அன்னூரில் வருகிறது. எனவே, 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
பழனிசாமி பங்கேற்பு
அவருடன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். பிரதமரின் ரோடு ஷோ இதுவரை முடிவு செய்யப்படவில்லை என கோவை பாஜகவினர் தெரிவித்தனர்.
பிரதமரின் வருகையை ஒட்டி, கோவை கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல், மேடை, பல ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகர போலீஸ் உயரதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துவருகின்றனர்.
முதல்வர் 2-ம் கட்ட பிரச்சாரம்
திமுக கூட்டணியில் திமுக 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2, கொமதேக ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. முதல் கட்டமாக கடந்த வாரம், கொடிசியா மைதானத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
2-ம் கட்டமாக நாளை மாலை
7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், குன்னூர், கூடலூர், ஊட்டி ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே நாளில், கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால், மாநகர காவல் ஆணையர் என்.கண்ணன், மேற்கு மண்டல ஐஜி ரம்யாபாரதி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.