கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை (நவ.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலையும், பனிப்பொழிவும் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மத்திய மேற்கு வங்கக்கடல் வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு கேரளாவில் இருந்து கர்நாடகா வரை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.24) கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இதர 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.25-ம் தேதி தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.26-ம் தேதி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ.27-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.24) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
மழைப் பொழிவு: தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கம், சைதாப்பேட்டை, எண்ணூர், மீனம்பாக்கம், மணலி புதுநகர், கடப்பாக்கம், திருவொற்றியூரில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.