கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சென்னை - கன்னியாகுமரி, திருச்சி - சேலம், சேலம் - கோவை உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 60 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.
சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்.1-ம் தேதி முதல் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளை சுற்றியுள்ள உள்ளூர் சிறிய ரக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையை சுற்றி அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகள் அமைந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சலுகை அடிப்படையில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகின்றன. 20 கி.மீ. சுற்றளவுக்கு உட்பட்டு வசிக்கும் மக்களுக்கு சிறிய ரக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.340-ல் இருந்து ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. ஒரு சில சுங்கச்சாவடிகளில் ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.