திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான்.
திருச்சி: “அன்றைக்கு வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர். இன்றைக்கு ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்யும் நிலை உள்ளது.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: சிறப்புத் தீவிரத் திருத்தம் என்று 1 கோடி வாக்காளர்களை நீக்கி உள்ளனர். பிழையைத் திருத்தாமல் மொத்தமாக அடித்துவிட்டு எழுதியதை எப்படி ஏற்க முடியும். 2 மாதங்களில் விடுபட்டவர்களை எப்படி சேர்க்க முடியும். நாட்டு மக்களின் கடைசி மதிப்பு மிக்க உரிமையே இந்த வாக்கு தான். அதைக் காப்பாற்றவே பெரும் போராட்டமாக இருக்கிறது.
பிஹாரில் பாஜக தங்களுக்கு வராத 81 லட்சம் வாக்குகளை நீக்கியது. இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்களை நீக்குவதை விட்டுவிட்டு மொத்தமாகவே நீக்கினால் எப்படி?. தன் குடிகளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்புமிக்க வாக்கு உரிமையையே பாதுகாத்து வழங்க முடியாத அரசு அதிகாரத்தின் பொறுப்பற்ற செயலையை இந்த எஸ்ஐஆர் பணிகள் காட்டுகிறது.
அன்றைக்கு வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர். இன்றைக்கு ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்யும் நிலை உள்ளது. இது கொடுமையானது.
‘களத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவோம்’ என ஈரோட்டில் பேசிய விஜய், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் ஏன் போட்டியிடவில்லை?. பெரியார் பிறந்த ஊரில் நிற்க வேண்டியது தானே. திமுகவும், நாதகவும் தான் ஈரோடு கிழக்கில் மோதியது. களத்துக்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவை. அவர் பேசுவதை ரசித்து, சிரித்துவிட்டு போய்விட வேண்டும்.
விஜய், ‘ஈரோடு கடப்பாறை’ என்று யாரை சொல்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? அதெல்லாம் துருப்பிடித்து பழைய இரும்பு, பாத்திரங்கள் பேரீட்சம் பழத்துக்கு போட்டாச்சு.
அதிகாரத்தில் உள்ள கட்சிகள் தான் பணம் தருகின்றன. பாஜக பிஹாரில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டது. உத்தரப்பிரதேசத்தில் பணம் கொடுத்து. தேர்தல் ஆணையம் அதை தடுத்ததா?
இங்கு வாக்கை வாங்கிக் கொள்ளும் முறை இருக்கும்போது மக்களுக்கான சேவை என்ற எண்ணம் செத்துவிடும். தொகுதி ரூ.50 கோடி என விலை கொடுத்து வாங்கும் நிலை இருக்கும் வரை பணநாயகம் தான் இருக்கும். ஜனநாயகம் இருக்காது. வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை என்று இருந்தால் வாக்குக்கு பணம் கொடுப்பது ஒழிந்துவிடும்.
ஒரு நாடு 100 சதவீதமும் தனியார்மயத்தை சார்ந்து இருந்ததால் வந்த விளைவு. இண்டிகோ விமான நிறுவனம் விமானங்களை ரத்து செய்தது. தனி முதலாளியின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என்று கட்டமைக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 9,000 கள்ள வாக்குகள் பதிவாகியிருப்பதாக கூறும் அனுராக் தாக்கூர், அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிப்பாரா?. 200 தொகுதியை வாங்கிவிடுவோம் என்பதை தான் 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று உதயநிதி கூறுகிறார்.
மகளிர் உரிமை உள்ளிட்ட பல திட்டங்களில் ரூ.1,000 பணம் கொடுக்கும் அரசு அந்தப் பணத்தை எதிலிருந்து எடுக்கிறது?. சொத்துவரி, மின்கட்டணம் உயர்த்திவிட்டது. அரசு தந்த ரூ.1,000 வாங்கி ஆடு, மாடு வாங்கினேன் ஒரு பெண் பேசுகிறார். பொய்யையே புலமை மாதிரி பாடக்கூடாது.
பெண் உரிமை, கல்விக்காக பெரியார் போராடினார் என்று சொல்லும் உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். தேர்தல் வரும்போதும் தீயசக்திகள், தூய சக்திகளாகிவிடும். விஜய் முன்பு தீயசக்திக்கு ஏன் ஓட்டு போட்டார்?
அண்ணா, எம்ஜிஆர் கொள்கைக்கு ஓட்டு போடுவதில்லை. நீங்கள் கொடுக்கும் நோட்டுக்குத் தான் ஓட்டு. அப்படிப் பார்த்தால் காந்திக்கு தான் ஓட்டு.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டி ஒருவர் தற்கொலை செய்தது அறிவார்ந்தது கிடையாது. மதங்களைத் தாண்டி மனிதம் தான் புனிதமானது. இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு, சிவப்பு ஆடையில் வந்துருக்கீங்களே எதாவது குறியீடா? எனக் கேட்டபோது, ‘200 தொகுதியில் ஜெயிக்கணும்ல’ என தனது டிரேட் மார்க் சிரிப்பால் அதிரச்செய்தார்.