பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 
தமிழகம்

நாகர்கோவிலுக்கு பிரதமர் வருகை: கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று ரோடு ஷோ

போக்குவரத்து மாற்றம், ட்ரோன்கள் பறக்கத் தடை

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: ​நாகர்​கோ​விலில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ நடத்தி பாஜக மற்​றும் கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதரவு திரட்​டு​கிறார். இதை​யொட்டி நாகர்​கோ​விலில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளதுடன், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்​கப்​பட்டது.

டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் திரு​வனந்​த​புரம் வரும் பிரதமர், அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் மாலை 4 மணிக்கு நாகர்​கோ​வில் ஆயுதப்​படை மைதானத்தை வந்​தடைகிறார். அங்​கிருந்து கார் மூலம் நாகர்​கோ​வில் வேப்பமூடு சந்​திப்​புக்கு வரு​கிறார்.

          

வாக​னத்​தில் ரோடு ஷோவை தொடங்​கி, மணிமேடை சந்​திப்​பு, அண்ணா விளை​யாட்​டரங்​கம் வழி​யாக வடசேரி எம்​ஜிஆர் சிலை வரை ஒரு கிலோ மீட்​டர் தூரம் செல்​கிறார்.

பின்னர் மாலை 6 மணி​யள​வில் ரோடு ஷோவை முடித்​துக்​ கொண்டு நாகர்​கோ​விலில் இருந்து ஹெலி​காப்​டரில் புறப்​பட்டு திரு​வனந்​த​புரம் செல்​லும் அவர், அங்​கிருந்து டெல்லி செல்​கிறார்.

ரோடு ஷோவுக்கு பின்​னர் பிரதமர் பொது​மக்​களிடம் உரை நிகழ்த்​து​வது குறித்து எந்த அறி​விப்​பும் வெளி​யாக​வில்​லை. எனினும் கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தென்​காசி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களைச் சேர்ந்த தேஜ கூட்​டணி கட்​சிகளின் வேட்​பாளர்​கள் நாகர்​கோ​வில் வரு​மாறு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, இவர்​களை ஒரே மேடை​யில் நிறுத்​தி, அவர்​களுக்கு பிரதமர் ஆதரவு திரட்​டு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிரதமர் வரு​கையை முன்​னிட்டு குமரி​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

ரோடு ஷோ நடை​பெறும் சாலை​யில் குமரி, நெல்​லை, தூத்​துக்​குடி, தென்​காசி மாவட்ட வாரி​யாக தொண்​டர்​கள் நின்று பிரதமரைப் பார்க்க தனித்​தனி​யாக இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

வேப்​பமூடு சந்​திப்​பில் இருந்து வடசேரி வரை சாலை​யின் இரு​புற​மும் இரும்பு கம்​பிகளால் தடுப்புகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. திரு​வனந்​த​புரத்​தில் இருந்து நாகர்​கோ​வில் ஆயுதப்​படை மைதானத்​துக்கு பலமுறை ஹெலி​காப்​டர்​கள் இயக்​கப்​பட்​டு, தரை​யிறக்​கப்​பட்டு ஒத்​திகை நிகழ்ச்சி மேற்​கொள்​ளப்​பட்​டது.

பிரதமர் பயணிக்​கும் சாலை​யில் இன்று மதி​யம் 1 மணி முதல் பிரதமர் இங்​கிருந்து புறப்​படும் வரை எவ்​வித வாக​ன​மும் செல்ல அனு​மதி இல்​லை. மேலும், நாகர்​கோ​வில் சுற்று வட்​டாரத்​தில் இன்று ட்ரோன்​கள் பறக்கவும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT