சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (நவ.13) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவ.15-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும்.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
புயலாக மாற வாய்ப்பு
நாளை உருவாகும் காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.