சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2-ம் கட்டமாக ராஜஸ்தானில் இருந்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த துணை ராணுவப் படையினர்.

 
தமிழகம்

மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகும்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தருமபுரியில் சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. இதையடுத்து, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தலா 2,106 தேர்தல் பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.69 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

          

இந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதல் நாளிலேயே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட முதல் நாளில் மொத்தம் 867 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. அந்த வகையில், இதுவரை 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 3,430 மனுக்கள் இதில் 2,731 ஆண்கள், 698 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3,430 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 மனுக்கள், பர்கூர் தொகுதியில் 29 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக மானாமதுரை, நிலக்கோட்டையில் தலா 5 மனுக்களும், காட்டுமன்னார்கோவில், திருவாரூர், பேராவூரணி, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் தலா 6 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இதுவரை 282 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக தியாகராய நகர்தொகுதியில் 28 மனுக்கள், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கையில் கூறியபடி அனைத்து

தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருப்பதால், தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தருமபுரி தொகுதியிலும் மனு தாக்கல் செய்கின்றனர். இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.

நாளை மனுக்கள் பரிசீலனை: இதைத் தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஏற்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விவரம் நாளை மாலை வெளியாகும். வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப்.9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னங்களைப் பொருத்தும் பணிகள் ஏப்.10-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

10-ம் தேதி முதல் பிரச்சாரம் மேலும் சூடுபிடிக்க உள்ளது. அந்தந்த தொகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள செலவினப் பார்வையாளர்களும், வேட்பாளர்களின் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். தேர்தல் விதிமீறல் தொடர்பாக ‘சி-விஜில்’ செயலியில் தெரிவிக்குமாறும், வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் மற்றும் கல்வித் தகுதி தொடர்பாக இசிஐ நெட் போர்ட்டலில் தெரிந்துகொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிரச்சாரம் ஏப்.21-ம் தேதிமாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அது முதல் தேர்தல் நாளான ஏப்.23 மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் வரையிலான 48 மணி நேரம் அமைதி காலமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவும், தொலைக்காட்சிகளை வைத்து காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மாவட்டதேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வாக்குஎண்ணும் மையங்களை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

தேர்தல் நாளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து விதமானதொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் அன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT