சென்னை: சென்னை ஐசிஎஃப் ஆலையில் முதன்முறையாக, தலா 15 பெட்டிகளை கொண்ட 2 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மேற்கு ரயில்வே மண்டலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் இயக்கப்படும் 12 பெட்டி மின்சார ரயில்களில் தினசரி பல லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இருப்பினும், காலை, மாலை வேளையில் ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
எனவே, அதிக பயணிகள் செல்லும் வகையில், 15 பெட்டி கொண்ட மின்சார ரயில் தயாரிக்க ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. தற்போது தலா 15 பெட்டிகளை கொண்ட 2 மின்சார ரயில்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன. மீதம் 4 ரயில்கள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகின்றன.
7,555 பேர் பயணிக்கலாம்
இதுகுறித்து, சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: மும்பை, சென்னையில் தான் அதிக அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
காலை, மாலை வேளையில் நெரிசல் மிகுந்த நேரங்களில், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க அறிவுறுத்தப்படுகிறது. இதற்கிடையில், தலா 15 பெட்டிகளை கொண்ட 6 மின்சார ரயில்களை தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தலா 15 பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரயில்கள் தயாரிப்பு பணி முடிந்து, மேற்கு ரயில்வேக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் முதல் 15 பெட்டிகளை கொண்ட மின்சார ரயிலையும், அண்மையில், 2-வது ரயிலையும் தயாரித்து வழங்கினோம்.
இந்த ரயில்கள் மும்பைக்கு அனுப்பப்படும். ஒரு ரயிலில் ஒரே நேரத்தில் 7,555 நபர்கள் பயணிக்க முடியும். இதுதவிர, தலா 12 பெட்டிகள் கொண்ட இரண்டு மின்சார ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ரயில் தானியங்கி கதவு கொண்டது. மெட்ரோ ரயில் பெட்டிகள் மாதிரியும், கதவுகள் பெரியதாகவும் இருக்கும். இந்த ரயில் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.