மேட்டூர் அணையின் தடுப்புச் சுவர் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட நீர்வளத் துறை அதிகாரிகள். 
TNadu

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்: அணை சுவர்களின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு

த.சக்திவேல்

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் டெல்டாபாசனத்துக்கான தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அணையின் தடுப்புச் சுவர் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ல்டெல்டா பாசனத்துக்காக தண்ணீர்திறப்பது வழக்கம். நடப்பாண்டில் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் மேல் இருந்ததாலும், பருவமழையை எதிர்பார்த்தும் உரிய நாளான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும், நீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.

ஆனால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பொய்த்ததாலும், மாதாந்திர நீர் பங்கீட்டை கர்நாடக அரசு வழங்காததாலும் நீர் வரத்து குறைந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பாசனத்துக்கான நீர் திறப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், மீன் வளம், குடிநீர்த் தேவையை கருத்தில்கொண்டு, டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு நேற்று காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது.

41 ஆண்டுகளுக்கு பிறகு...: 1982-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 41 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 122 கனஅடியில் இருந்து750 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 30.90 அடியாகவும், நீர் இருப்பு 7.88டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர்தேவைக்காக விநாடிக்கு 500கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடியாக சரிந்துள்ள நிலையில், அணையின் தடுப்புச் சுவர்கள் பெருமளவு வெளியே தெரிகின்றன. அதேபோல, கீழ்மட்ட மதகுகள், மேல்மட்ட மதகுபகுதிகள் நீரின்றிக் காணப்படுகின்றன.

அணையின் உறுதித்தன்மை, நீர்க்கசிவு குறித்து நீர்வளத் துறை நிர்வாகப் பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் படகு மூலம் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி, அணை தடுப்புச் சுவர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

காவிரி டெல்டாவுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 330.6 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 208.24 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணை வாயிலாகவும், 122.36 டிஎம்சி தண்ணீர் மழை மற்றும் நிலத்தடி நீரைக் கொண்டும் பூர்த்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதியிலிருந்து இதுவரை 92 டிஎம்சி தண்ணீர் பாசனத்துக்கு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து ஜூன் மாதம் முதல் இதுவரை 46 டிஎம்சி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒகேனக்கல்லில் 2,000 கனஅடி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 6-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்தது. ஆனால், 7-ம் தேதி விநாடிக்கு 1,500 கனஅடியாகக் குறைந்தது. கடந்த 3 நாட்களாக நீர்வரத்தில் மாற்றமின்றி இருந்த நிலையில் நேற்று காலை விநாடிக்கு 2,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து சற்றே உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT