கோப்புப் படம்
சென்னை: ரயில் பயணிகளின் கோரிக்கைகள் குறித்து, ரயில்வேக்கு கொண்டு செல்லும் வகையில், 40-க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து, தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக சுப்பிரமணியனும், பொதுச்செயலாளராக நஜிப் இசக் கனி, பொருளாராக னிவாசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் ரயில் பயணிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நீண்ட நாட்களாக இருக்கின்றன.
முதலில் பயணிகள் தேவைக்கு ஏற்ப, ரயில்கள் இல்லாமல் இருக்கின்றன. ரயில்களை அதிகரிக்க மத்திய ரயில்வே துறையிடமும், இங்குள்ள ரயில் பாதைகளுக்கான நிலம் கையகப்படுத்தித் தர தமிழக அரசிடமும் வலியுறுத்துவோம்.
மேலும், பயணிகள் அதிகமாக உள்ள இடங்களில், ரயில்களுக்கு கூடுதல் நிறுத்த வசதி, குறுகிய துார ரயில்களின் சேவை அதிகரிப்பது, சில வழித்தடங்களில் ரயில்களின் சேவை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, ரயில்வேயின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
அதுபோல, ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற ரயில் பயணிகளின் கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் மாநில அளவில் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.