சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

 
தமிழகம்

தமிழகத்தில் டிச.24 வரை வறண்ட வானிலை நிலவும்; நாமக்கல்லில் 16.3 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவு!

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நாமக்கல்லில் 16.3 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை  வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக டிச.25-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 23-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும்.  நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) அளவுகளின்படி அதிகபட்சமாக மலைப் பகுதிகளில் ஊட்டியில் 8 டிகிரி, குன்னூர், கொடைக்கானலில் 9 டிகிரி செல்சியஸ், சமவெளி பகுதிகளில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 16.3 டிகிரி, வேலூர் விரிஞ்சிபுரம் 16.5, தருமபுரியில் 16.6 டிகிரி, சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 22 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT