தமிழகம்

3 இலவச காஸ் சிலிண்டர் பெறும் பயனாளி பட்டியல் தயாரிப்பு தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 3 இலவச சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறவுள்ள பயனாளிகள் பட்டியல் தயாரிப்பில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 2027 பொங்கல் பண்டிகையின் போது இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதன்மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி இந்த திட்டத்துக்கான பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச காஸ் இணைப்பு பெற்றவர்கள், ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் மற்றும் ரூ.2.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தினர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது 2.4 கோடி வீட்டு சமையல் காஸ் இணைப்புகள் உள்ளன. இதில் ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1.1 கோடியாக உள்ளது. அதில் 42 லட்சம் இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை. எனவே, இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் பயனடைய உள்ளதாகவும் இலவச சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தமிழக அரசால் செலுத்தப்பட உள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT