மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றாமல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மீறியது. இதனால் ஆவேசம் அடைந்த முருக பக்தர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். தடியடி நடத்தி பெண்கள் உள்ளிட்ட பல நூறு பேரைப் போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருநாளில் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே மெகா தீபம் ஏற்றப்படுவது வழக்கும். மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைக்காகக் கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. அதில், உச்சிப் பிள்ளையார் கோயிலிலும், தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு மட்டும் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நவ.20-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். வேறு ஆட்களை மலையில் அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதில் பெரும் குழப்பம் நிலவியது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பலர் நேற்று அவசர மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும். தவறினால் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைக்கு அதிகாரிகள் ஆளாக நேரிடும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் எப்படியும் தீபத் தூணில் தீபம் ஏற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அதை தரிசிக்க திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டனர். அடிவாரத்தில் நின்று தீபத் தூணை பார்த்து வணங்கியபடி காத்திருந்தனர். சரியாக 6 மணிக்கு வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் என தூணைப் பார்த்தபடி கை கூப்பி வணக்கியபடி மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
மாலை 6.15 மணி வரை தீபத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அப்போதுதான் தீபம் ஏற்றப்படாது என்ற தகவல் பக்தர்களுக்குக் கிடைத்து. இதனால் பக்தர்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்தனர். மாவட்ட ஆட்சியர், தமிழக அரசு, காவல் துறை என பல்வேறு தரப்பினரையும் விமர்சித்து அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். ஆங்காங்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை எப்படி நிறைவேற்றாமல் இருக்கலாம் எனக் கேட்டு முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வெற்றி வேல், வீர வேல் என கோஷமிட்டனர்.
அத்துடன், முதல்வர் விஜய், தவெகவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழக்கமிட்டனர். திருப்பரங்குன்றம் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பழனியாண்டவர் கோயில் அருகேயுள்ள படிக்கட்டு வழியாகப் பக்தர்கள், பொதுமக்கள், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டோர் போலீஸார் வைத்திருந்த இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு மலைக்கு மேல் செல்ல முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்தனர்.
பெண்கள் போராட்டம்
மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசம் அடைந்தனர். பெண் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயில் மண் தரையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர், மலைத் தூணில் தீபம் ஏற்றுவதைப் பார்க்க குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்களும் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தீபம் ஏற்றாமல் செல்ல மாட்டோம் என போலீஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளுடன் இருந்ததால் அவர்களை அப்புறப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். எனினும், பெண் போலீஸார் அவர்களையும் தரையில் தரதரவென இழுத்துச் சென்று போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அதிருப்தியடைந்த பெண்கள், கோயில் தூணில் தீபம் ஏற்ற மனமில்லாத இந்த தவெக அரசும், முதல்வர் ஜோசப் விஜய்யும் எங்களுக்கு வேண்டாம் என கொந்தளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர், பக்தர்கள், பெண்களைப் போலீஸார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர். அப்போது வாகனங்களில் ஏற மறுத்து பேருந்து, போலீஸ் வாகனங்களின் டயர்களுக்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்துவோம் என்று போலீஸார் எச்சரித்தனர். அதன் பிறகும் பக்தர்கள் கலைந்து செல்லாமல் கோஷமிட்டபடி இருந்தனர். போலீஸ் வேன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலரும் காயம் அடைந்தனர்.
போலீஸாரின் கண்காணிப்பு, பாதுகாப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு மலை உச்சிக்கும், கோயில் உள்பகுதிக்கும் செல்ல முயன்றதால் பதற்றமான சூழ்நிலையும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. தீபம் ஏற்றாமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதையடுத்து, அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு திருமண மண்டங்களில் அடைக்கப்பட்டனர். கோயிலுக்குள் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. பல ஆயிரம் பேர் குவிக்கப்பட்ட நிலையிலும், போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படாததால், அவமதிப்பு வழக்கை சந்திக்கும் சூழலில் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையால் திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
என்ன சொல்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்?
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றாமல், உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அவமதித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மத்திய அரசின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான ஜி.கார்த்திகேயன் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத் தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக அமல்படுத்துவேன் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவாதம் அளித்துவிட்டு அதை அப்பட்டமாக மீறியுள்ளார். அதிகாரிகளும் மலையின் உச்சிக்குத் தீபமேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம் என்று கூறி நீதிமன்றத்தைத் திட்டமிட்டு ஏமாற்றி உள்ளனர்.
இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அதிகாரி, அறங்காவலர்கள் உள்ளிட்டவர்கள் மீது உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் கொஞ்சம் தீவிரம் காட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க முடியும். இல்லையெனில் ஆட்சியைக் கலைக்கும் 356-வது பிரிவை எங்கு பயன்படுத்தலாம், எங்கு பயன்படுத்தக் கூடாது என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தவறியதற்காக அரசியலமைப்புச் சட்ட ரீதியாக தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது எனக்கூறி ஆட்சியைக் கலைக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யலாம்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசே நேரடியாக ஆட்சியைக் கலைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும் சட்ட ரீதியாக அனைத்து வழிவகைகளும் உள்ளன. கடைசி நேரத்தில் கோயில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியதால்தான் எங்களால் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்று ஆட்சியர் காரணம் சொல்கிறார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது இதுபோன்ற தகவலை அறங்காவலர் குழுவினர் நீதிமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை? தற்போது உச்ச நீதிமன்றத்தைச் சமாளிக்க மீண்டும் ஒரு நாடகம் ஆடுகின்றனர். அந்தத் தீர்மானம் உச்ச நீதிமன்றத்தில் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் பி.சுப்பையா கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. சீராய்வு மனுக்கு இன்னும் வழக்கு எண் கொடுக்காததால், அதை கணக்கில் கொண்டு வர முடியாது. அப்படியிருந்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேண்டும் என்றே மீறப்பட்டுள்ளது. அதேபோல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவும் மீறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டே மனுக்களை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இப்போது உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை அரசு மீறியுள்ளது.
இதனால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 5 பேரும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க வேண்டும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்தும், மனுதாரர்களின் மனுக்களை ஏற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.