உழவர் தின வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
சென்னை: தேசிய உழவர் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய உழவர் தினத்தையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இபிஎஸ்: உலகுக்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்துக்கும், மக்களின் வாழ்வுக்கும் அடித்தளமாக நிற்கும் விவசாயப் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்.
இன்னல்களையும், இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது. நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடிப்படை. உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
நயினார் நாகேந்திரன்: நம் பாரத தேசத்தின் முதுகெலும்பாக இருக்கும் உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் இன்று. மண்ணின் வாசனையோடு தங்கள் வாழ்க்கையையும் கலந்தவர்கள் உழவர்கள். விதைத்தக்கும் ஒவ்வொரு விதையிலும் நம் எதிர்காலத்தையும் சேர்த்து விதைக்கும் அவர்களின் உழைப்பு தான் இந்த தேசத்தின் உண்மையான செல்வம். உங்கள் உழைப்புக்கு நம் தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்.
அன்புமணி ராமதாஸ்: இந்தியாவில் உழவர்களின் உரிமைகளுக்காக போராடிய மாபெரும் தலைவர் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங் பிறந்தநாளான டிசம்பர் 23 தேசிய உழவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் அனைவருக்கும் இந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.