உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகள் விளக்கம்
சென்னை: “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. காவல் மரணங்களை சகித்துக்கொள்ள முடியாது” என உள்துறைச் செயலர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்து விவரிக்க உள்துறைச் செயலர், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
உள்துறைச் செயலர் தீரஜ் குமார் கூறும்போது, “கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. 2021-ல் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025-ல் இது 1.461 ஆக குறைந்துள்ளன.
2021-ஆம் ஆண்டில் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவான நிலையில், 2025-ஆம் ஆண்டு அது 401 வழக்குகளாக குறைந்துள்ளன. சட்டம் - ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக ஒரு சில செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்திக்கிறோம்.
காவல் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது. காவல் நிலைய மரணங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு. கடந்த முறை அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிபிசிஐடி அந்த வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்பந்தப்பட்டவர்கள் போலீஸார் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐ-க்கு வழக்கை அரசு மாற்றியது.
இளைஞர் ஆகாஷ் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல் மரண வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
கோயில், விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளன.
மக்களை எப்படி அணுக வேண்டும், விசாரணையை எப்படி நடத்துவது என தெளிவாக காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்புகள் பெறப்படுகின்றன.
2021-ஆம் ஆண்டில் 6,800 போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போதைப் பொருள் தடுப்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியதால் தற்போது வழக்குகள் அதிகரித்துள்ளன.
நிரந்தர டிஜிபி விவகாரம் குறித்து யுபிஎஸ்சி-க்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பேசும்போது, “பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.
தைரியமாக புகாரளிக்க ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். இதனால் போக்சோவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன. சிறிய குற்றங்கள் என்றாலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.