சென்னை: தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில் (2026-27) ரூ.531.54 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமார் 1,46,560 கி.மீ. ஆகும். தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை அமைப்பதும், பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை மேற்கொள்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்காக, ‘சேது பந்தம் திட்டம்’ 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் இது, சேது பாரதம் திட்டமாக மாற்றப்பட்டது. இத்திட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்களை அப்புறப்படுத்தி மேம்பாலங்கள் கட்டும் திட்டமும் விரிவுப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், நாடுமுழுவதும் 230 ரயில்வே கேட்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் இருப்பது கண்டறியப்பட்டன. தமிழகத்தில் 9 ரயில்வே கேட்கள் கண்டறியப்பட்டு, தற்போது வரை 6 கேட்களை அகற்றி மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. திருச்சியில் மேம்பாலம் பணி முடியும் தருவாயில் உள்ளது.
நீடாமங்கலம் மேம்பாலப் பணி ரூ.170 கோடியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஆம்பூர் ரெட்டித் தோப்பு பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணி ரூ.65.98 கோடியில் பணி நடைபெறுகிறது. இந்த இரண்டு பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.81.54 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுதவிர, தமிழகத்தில் நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலப் பணிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.531.54 கோடியை மேம்பால பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து, ஓய்வுபெற்ற ரயில்வே தொழிற்சங்க தலைவர் மனோகரன் கூறும்போது, “தமிழகத்தில் ரயில்வே கேட்களை அகற்றி, மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதுபோல, நாடு முழுவதும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ரயில்வே கேட்களை அப்புறப்படுத்த, சேது பாரதம் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.