படம் எம். சாம்ராஜ்

 

படம் எம். சாம்ராஜ்

தமிழகம்

சகோதரரை தாக்கிய வழக்கு: புதுவை நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆஜர்

அ.முன்னடியான்

புதுச்சேரி: சகோதரரை தாக்கியது தொடர்பான வழக்கில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இவ்வழக்கு வரும் 9-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரியகுளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம் 1) விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகையை பெற ஆஜராக உத்தரவிட்டபோதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், ரத்து செய்ய கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு, “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா?” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தியது.

இதையடுத்து, ஆக.31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சேரலாதன், கடந்த வாரம் மாஹேவுக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில், கடந்த மாதம் ஆக.31-ம் தேதி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போதும், தமிழக அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. அப்போது அமைச்சரின் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் இவ்வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து விசாரிக்க அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து இவ்வழக்கை ( இன்று ) செப்.4-ம் தேதிக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார். தொடர்ந்து, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை அமைச்சர் மரிய வில்சன் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, நீதிபதி சந்திரசேகர் வழக்கு விசாரணையை வரும் செப்.9-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் அமைச்சர் மரிய வில்சன் மீண்டும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராாவார் என தெரிகிறது.

SCROLL FOR NEXT