தமிழகம்

ஐடிஐ மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ்: அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் 5-வது திறன் பட்டமளிப்பு விழாவையொட்டி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் (ஐடிஐ) 520 மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழை அமைச்சர் முகமது பர்வேஸ் நேற்று வழங்கினார்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வெல்டர், டர்னர், ஃபிட்டர், மோட்டார் வாகன மெக்கானிக் உள்ளிட்ட பொறியியல் பிரிவுகளிலும், தையல் தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட பொறியியல் அல்லாத பிரிவுகளிலும் மாணவர்க ளுக்கு பயிற்சி தரப்படுகிறது.

மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில், 2026-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 19,199 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 17,645 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வகையில், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 5-வது திறன் பட்டமளிப்பு விழா நடந்து வருகிறது.

அதன்படி, சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற விழாவுக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமை தாங்கி, 520 மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கினார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலமாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட 2 அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் மற்றும் 2 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

விழாவில், துறையின் செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT