தமிழகம்

“இனி புதிய நடைமுறை பின்பற்றப்படாது” - தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து ஆதவ் அர்ஜுனா

வேட்டையன்

சென்னை: இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு காங்கிரஸ் - 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் தலா 2 இடங்களுடன் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கின. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ-க்களில் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்த பதவியேற்பு விழாவில் முதலில் வந்தேமாதரம், நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையானது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். அந்த வகையில் அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப்பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், இது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். “நீராரும் கடலுடுத்த…’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் ‘உலகெங்கும் பரவ வேண்டும்…’ என்ற லட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமை மிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.

இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT