சென்னை: தமிழகத்தில் இம்மாதம் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வட கடலோர தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (மார்ச் 17) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், 19-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்திலும் ஓரிரு இடங்களிலும், 22-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்
தமிழகம், புதுச்சேரியில் நாளை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.