சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சட்டப் பேரவையில் முதல் முறையாக உரையாற்றுகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படாததை சுட்டிக்காட்டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேரவையில் வாசிக்காமல் வெளியேறினார். அதன்பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே பேரவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்தார்.
அதற்குப் பிறகு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில், அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிந்து, தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன், முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பொறுப்பேற்றார்.
இதையடுத்து, 17-வது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. தற்காலிகப் பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதன்பின், பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மே.13-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முன்னதாக, ஆளுநர் அர்லேகரை சமீபத்தில் சந்தித்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், பேரவையில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து காலை 9.55 மணிக்கு ஆளுநர் அர்லேகர் தலைமைச் செயலகம் வருகிறார். அவரை, பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் பேரவையின் புதிய செயலர் ஆர்.சாந்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். அதன்பின், காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார். ஆளுநரின் ஆங்கில உரையைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழ் உரையை வாசிப்பார். அதன்பின், பேரவையின் இன்றைய நிகழ்வுகள் முடிவுறும்.
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு, பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் கூடி, பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். வரும் திங்கட்கிழமை ஜூன் 22-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 22-ம் தேதி முதல்வர் விஜய் பிறந்த நாள் என்பதால் அன்று சட்டப்பேரவையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்படும் என்றும் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலுவல் ஆய்வுக் குழு
அலுவல் ஆய்வுக் குழுவில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆர்.நிர்மல்குமார், அரசு கொறடா சபரிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தவெக ஆட்சி அமைத்த பிறகு, முழுமையாக நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில், மாநிலத்தில் நிகழும் பாலியல் குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகளின் அதிருப்தி, தமிழகத்தின் நிதிநிலை குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினையை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசும், சட்டப்பேரவைக் கூட்ட விவாதத்தை முதல் முறையாக எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 5 ஆண்டுகளாகவே, தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரசு உரையை வாசிக்காமல் அப்போதைய ஆளுநர் ரவி தவிர்த்து வந்தார்.
சமீபத்தில், முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அறிவுறுத்தலின்படி, முதலில் வந்தே மாதரம், அதன்பின் தேசிய கீதம், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தன. அதன்பின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.