தமிழகம்

ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையம் ‘புனல்’: கட்டணமில்லா சேவை எண் ‘1916’ அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையத்தை - ‘புனல்’ (‘1916’) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம், குடிநீர் தொடர்பான அனைத்து புகார்களையும் பதிவு செய்வதற்கான பொதுவான தளத்தை பொதுமக்களுக்கு வழங்குகிறது. 24 மணி நேரமும் இயக்கப்படும் இத்தளம், குடிநீர் கிடைக்கும் தன்மை, நீரின் தரம் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பான புகார்கள் விரைந்து கேட்கப்பட்டு, தீர்க்கப்படுவதை உறுதி செய்கிறது.

          

‘புனல்’ மையம், குடிநீர் வழங்கும் பல்வேறு துறைகள் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகள் இயக்குநரகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையரகம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் இணைக்கிறது.

விரைந்து தீர்வு காணப்படும்: இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரை ஒரே இடத்தில் பதிவு செய்யலாம். அப்புகார் தானாகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் சென்றடைகிறது. இந்த ஒருங்கிணைந்த வழிமுறை, துறைகளுக்கு இடையேயான தாமதங்களைக் குறைத்து, விரைவாக தீர்வு காண உறுதி செய்கிறது.

பொதுமக்கள் தங்கள் குடிநீர் தொடர்பான புகார்களை, ஐவிஆர் அல்லது கட்டணமில்லா ‘1916’ அழைப்பு மூலமோ, punal.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ, ‘புனல் சிட்டிசன் ஆப்’ வாயிலாகவோ, ‘94 9999 1916’ என்ற எண்ணுக்கு ‘Hi’ என்று அனுப்புவதன் மூலமாகவோ தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT