சென்னை உயர் நீதிமன்றம்

 
தமிழகம்

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருடன் சுமுக தீர்வை எட்ட முயற்சி: தமிழக அரசு

உயர் நிதிமன்றத்தில் தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க, ஆளுநருடன் இணைந்து இந்த அரசு ஒரு சுமுக தீர்வை விரைவில் எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை கடந்த முறை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களில் நிரந்தர துணைவேந்தர்கள் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக இல்லையென்றால் உயர் கல்வி பாதிக்காதா?’ என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இந்த வழக்கில் உயர்கல்வித் துறைச் செயலரை எதிர்மனுதாரராக சேர்த்தும், இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் நவ.17 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, முந்தைய திமுக ஆட்சியில் துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளே துணைவேந்தர்கள் நியமன முட்டுக்கட்டைக்கு காரணம் என்றும் விளக்கமளித்தார்.

தமிழக அரசு நிறைவேற்றிய துணைவேந்தர்கள் நியமன மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்திருந்தாலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முதன்மை வழக்கு மீதான விசாரணை முடியும் வரை எந்தவொரு நியமனமும் மேற்கொள்ள மாட்டோம் என தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்து இருந்தது.

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் தற்போதைய அரசாலும் துணைவேந்தர்களை நியமிக்க முடியாதபடி சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க, பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரான ஆளுநருடன் இணைந்து இந்த அரசு ஒரு சுமுக தீர்வை விரைவில் எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அப்படியென்றால் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீண்டும் ஆளுநரிடமே ஒப்படைக்கும் வகையில், சட்டத் திருத்தத்துக்கு முந்தைய நிலைக்கு தற்போதைய அரசு திரும்புமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “அவ்வாறு நடக்கலாம் என முன்கூட்டி கணித்து சொல்லிவிட முடியாது. இந்த விவகாரத்தி்ல் தமிழக மாணவர்களின் உயர் கல்வியை கருத்தில் கொண்டு ஒரு நிரந்தர தீர்வை மேற்கொள்வது அவசியம் என்பதை தமிழக அரசு உணர்ந்துள்ளது. இன்னும் மூன்று வாரங்களுக்குள் இந்த விசயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அல்லது தீர்வு இருக்கும் என நினைக்கிறேன்.

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் பணியை கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த குழு தகுதியான அமைப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு கருதுவதாகவும் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT