சென்னை: வேலூரில் விமான நிலையம் அமைய தமிழக அரசு கூடுதலாக 100 ஏக்கர் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்கு வெளியே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ் மொழி குறித்து தேமுதிகவின் நிலைப்பாடு தெளிவானது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எல்லா இடங்களிலும் முதலில் தான் பாட வேண்டும்.
விஜயகாந்த் இறுதிவரை தமிழ் மொழியில் மட்டுமே நடித்தவர். தமிழ் பற்று மிக்கவர். ‘அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியையும் கற்போம்’ என்பதே அவரது தாரக மந்திரம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிய வேண்டும் என்பதை இந்த அரசு கட்டாயமாக்க வேண்டும்.
நீட் தேர்வை ஒட்டுமொத்த மக்களும் வேண்டாம் என்று சொல்லும்போது, தேமுதிகவும் அதே நிலைப்பாட்டையே எடுக்கிறது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி முறைப்படுத்தப்பட வேண்டும். முறைகேடான வழிகளில் நிதி வருவதை அனுமதிக்கக் கூடாது.
லஞ்ச ஊழலுக்கு இடமின்றி வெளிப்படைத்தன்மையுடன் நிதி கையாளப்பட வேண்டும். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளைப் பேச நான் முயன்றேன். ஆனால், மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசும்படி அவைத் தலைவர் அறிவுறுத்தினார்.
தமிழகம் முழுவதும் போராடி வரும் மீனவர்களின் கோரிக்கைகளை அரசு கவனிக்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். வேலூர் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, ஏற்கெனவே உள்ள 98 ஏக்கருடன் கூடுதலாக 100 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்கினால், அங்கு பெரிய விமான நிலையம் அமைய வாய்ப்பு ஏற்படும். இது குறித்து சுதீஷ் ஏற்கெனவே மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் பட்டதாரி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலையில் ஒளிபரப்பப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் சட்டப்பேரவை நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்” என்று பிரேமலதா கூறினார்.