கோப்புப் படம்
மதுரை: தமிழகத்தில் கள் சேகரிப்பு முதல் விற்பனை வரை எந்த கட்டத்திலும் கலப்படத்துக்கு வாய்ப்புள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மனை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடை விதிக்கும் கொள்கை முடிவை மறு ஆய்வு செய்து, கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தீரன் திருமுருன் என்பவர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவின் விவரம்:
கள்ளில் ஆல்கஹால் அளவு குறைந்தளவே உள்ளது. இருப்பினும் அதில் போதையை அதிகரிக்க அதில் குளோரல் ஹைட்ரேட் மற்றும் ஊமத்டதை போன்ற மயக்கமூட்டும் பொருட்கள் கலக்கப்படுகிறது.
இந்த கலப்படக் கள் குடிப்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன் உயிருக்கே ஆபத்தாகவும் அமையும். மேலும் கள்ளின் நுகர்வை முழுமையாகக் கண்காணிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இயலாது. கள்ளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பனை மரமும் ஒரு உற்பத்தி நிலையமாகவே செயல்படுகிறது. எனவே, ஒவ்வொரு பனை மரத்தின் கீழும் நடைபெறும் உற்பத்தியைத் தனித்தனியாகக் கண்காணிப்பது சாத்தியமற்றது.
கள் சேகரிப்பு முதல் கள் விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் நிலை வரை, எந்தவொரு கட்டத்திலும் கலப்படம் நடைபெற வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டே கள் இறக்க தடை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தென்னை மரங்களிலிருந்து 'நீரா' அல்லது 'பதனீர்' மற்றும் பனை, பேரீச்சை மற்றும் பிற பனை வகையிலான மரங்களிலிருந்து 'பதனி'ஆகியவற்றை இறக்க தொழிலாளர்களுக்கு ஏற்கனவே அனுமதி உள்ளது. இவற்றை எந்த மாற்றத்துக்கும் உட்படுத்தாமல் அப்படியே விற்பனை செய்யலாம்.
இவை தமிழ்நாடு பனை பொருட்கள் மேம்பாட்டு வாரியம் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன. நீரா அல்லது பதனீரை பனை வெல்லம் மற்றும் அது சார்ந்த பிற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இதனால் பனைத் தொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.
தென்னை, பனை, ஈச்சமரம் அல்லது பிற பனை வகைத் தாவரங்களிலிருந்து புளிக்காத சாறு எடுக்க எந்த தடையும் இல்லை. புளித்த தயாரிப்பான கள்ளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கள் இறக்க அனுமதி கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பொது சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் போதை தரும் பானங்களைத் தடை செய்வதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.