திருப்பரங்குன்றம் |கோப்புப் படம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு கொண்டு செல்லவதை தடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் மதுரையில் இன்று கூறியதாவது: முருகனின் முதல் படைவீடு என மிக முக்கியத்துவம் வாய்ந்தது திருப்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இந்துக்கள் எதிர்பார்ப்பின் படி உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசின் இந்து அறநிலைத்துறை மறுத்து விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து இந்துக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது திமுக எம்பி நவாஸ் கனி அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இந்துக்களிடையே கடும் எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா நடத்த பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கொடிமரம் எடுத்து செல்லபட்டு அந்த கொடியை திருப்பரங்குன்றம் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டதும் அதை அனுமதித்த மாநில அரசின் செயலும் கண்டனத்துகுறியது.
இந்நிலையில் தர்காவுக்கு சென்ற இஸ்லாமியர்கள் சிலர் இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை மலைமீது எடுத்துச் சென்றது காவல்துறை சோதனையில் கண்டறியபட்டு தடுக்கப்பட்டுள்ளது.
மலை மீது அசைவ உணவுகள் கொண்டு செல்ல தடை உள்ள நிலையில், இதுவரை சந்தனக் கூடு விழா நடத்தியவர்கள் இந்த ஆண்டு பலியிடும் நிகழ்வான கந்தூரி விழா நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை இஸ்லாமியர்கள் எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். மேலும், அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எவராயினும் சட்டத்துக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கும் கட்டுபட்டவர்கள். ஆனால், தொடர்ந்து இஸ்லாமியர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மீறும் செயலில் ஈடுபட்டு வருவது வருத்தப்பட வைக்கிறது. எனவே, ஆளும் திமுக அரசு வாக்குவங்கி அரசியலை கைவிட்டு பதட்டத்தை உருவாக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலை மீது அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது, ஆடு மாடு கோழி வதை கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.