முதல்வர் ஸ்டாலின்
மயிலாடுதுறை: இலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு சொந்தமான படகில் அவரது கணவர் பொண்ணு குட்டி(45), குமார்(45), ரீகன்(20), புதுப்பேட்டை அன்புராஜ்(30), பழையார் கவுசிகன்(26) ஆகியோர் நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இதேபோல, வானகிரியைச் சேர்ந்த முபின்தாஸ் என்பவருக்குச் சொந்தமான படகில் அவரது தந்தை தங்கராசு(45), மதன்(21), ராமலிங்கம்(30), அக்கரைப்பேட்டை செல்வராஜ்(48) ஆகியோர் கோடியக்கரை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இந்த 2 படகுகளும் அனலை தீவு அருகே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 9 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காரை நகர் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூதகர நடவடிக்கைகள்.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிஉள்ள கடிதம்: புத்தாண்டின் தொடக்கத்திலேயே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அவல நிலையை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 73 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். மேலும், 251 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன.
தொடர் கைது சம்பவங்கள், தமிழக மீனவ சமுதாய மக்களிடையே பதற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்கவும், இனியும் கைது நடவடிக்கைகள் தொடராமல் இருக்கவும் வெளியுறவுத் துறை மூலம் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.