தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்

 
தமிழகம்

தமிழக நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை: நிதியமைச்சர் மரிய வில்சன்

அ.முன்னடியான்

புதுச்சேரி: “முதல்வர் விஜய் கூறியதைப் போல தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.” என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் புதுச்சேரி கூடைப்பந்து சங்கம் சார்பில் 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகள் மற்றும்  பதக்கம் வழங்கி பாராட்டினர்.

பின்னர் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம், “புதுச்சேரி நான் பிறந்த ஊர். இங்கு கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளேன். இங்கு வந்தது பழைய நினைவுகளை அளித்துள்ளது. மேலும், அமைச்சராக பங்கேற்கும் முதல் விழாவாகவும் இது அமைந்துள்ளது,” என்றார் . 

தொடர்ந்து அவர், “முதல்வர் விஜய் கூறியதைப் போல தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். மேலும் திருத்திய பட்ஜெட் கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.

அப்போது, முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் வெற்றியா, தோல்வியா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது  மரபுசீர்முறை சார்ந்தது. முதல் முறையாக அவர் தமிழகத்தின் முதல்வராகியுள்ளார். அதனடிப்படையில் பிரதமரை சந்தித்துள்ளார்,” என்றார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா? என்ற கேள்விக்கு, அதை தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களாக என்று கேட்டற்கு, “கண்டிப்பாக பாருங்கள்” என்று பதில் அளித்தார்.

கர்நாடகா, சத்தீஸ்கர் அணிகள் சாம்பியன்:

ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணியும், பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் சாம்பியன் பட்டம் வென்றனர். ஆண்கள் பிரிவில் 2- ம் இடம் ஹரியானா, 3-ம் இடம் ராஜஸ்தான் அணிகள் பெற்றன. பெண்கள் பிரிவில் 2-ம் இடம் கேரளம், 3-ம் இடம் தமிழக அணியும் பிடித்தன.

SCROLL FOR NEXT