தமிழகம்

நாடு முழுவதும் ரோடு ஷோவுக்கு தடை விதிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: “இந்தியா முழுவதும் ரோடு ஷோவுக்கு தடை விதிக்க வேண்டும்” என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.

கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டில் பிரதமர் முதல் நடிகைகள் வரை அனைவரும் ரோடு ஷோ செல்கின்றனர். காரின் மேற்கூரையை திறந்து பறக்கும் முத்தங்களை தருகின்றனர். கூடியிருக்கும் மக்களும் பறக்கும் முத்தங்களை தந்து முத்தமழையில் நனைகின்றனர். இதனால் எவ்விதப் பயனுமில்லை. போக்குவரத்தும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா முழுவதும் ரோடு ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

முதல்வர் விஜய் புதுக்கோட்டைக்கு நேற்று சென்றது. பாமா விஜயம் படத்தை நினைவூட்டியது. அதில் வரும் “வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டனா, கடைசியில் துந்தனா” என்ற பாடலை போல தமிழக கடன் அளவு ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில் ஆடம்பரத்திற்கு அளவேயில்லை. தனி விமானம், ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு இடம் மாற்றப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பயனர்களுக்கு சலவைப்பெட்டி, தையல் இயந்திரங்களை முதல்வர் விஜய் வழங்கினார். தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தை சம்பந்தப்பட்ட ஊருக்கு நேரில் வந்தும், காணொலி வாயிலாகவே முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளார். இதற்கு சென்னையில் இருந்தே காணொலி வாயிலாக திறந்திருக்கலாம்.

முன்னதாக திருச்சி - புதுக்கோட்டை சாலையில் முதல்வர் விஜய்யின் ரோடு ஷோ நடைபெற்றது. இதற்காக வழிநெடுகிலும் 50 கி.மீட்டருக்கு இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, முதல்வர் நிகழ்ச்சிக்கு ரூ.10 கோடி செலவாகியுள்ளது. 4,500 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் வரிப் பணம் வீணாகியுள்ளது. தூய சக்தியின் செயல்பாடுகள் இப்படி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே காவிரிப் பாசனம் பெறுகிறது. பிற பகுதிகள் ஏரி, குளங்களை நம்பியுள்ள வறட்சியான புஞ்சை பகுதி. கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டத்திற்காக கதவணை கட்டப்பட்டது.

இங்கிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இக்கால்வாயால் 73 ஏரி, குளங்கள் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இத்திட்டத்தை விரைவுப் படுத்தி செயல்படுத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் பயன்பெறும். காவிரி உபரி நீரை பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையோ, அதுகுறித்து எவ்வித நடவடிக்கையோ இல்லை. அதேபோல் காகித ஆலைகளுக்காக மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டதால் வறட்சி ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் புதுக்கோட்டை பயணத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. பயணம் என்றால் பயன் இருக்க வேண்டும். பயணத்தால் நன்மை அதிகமா? தீமை அதிகமா? என்றால் தீமையே அதிகம். திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விவசாயிகளுக்கு நேற்று பரிசு வழங்கியுள்ளார். இவர்கள் அவரது ஆதரவு விவசாயிகள், மற்ற விவசாயிகளை அமைச்சர் சந்திப்பதில்லை” என்று நல்லசாமி கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT