தமிழகம்

வேலூர் தொகுதியில் வெற்றிக் கோட்டை யாருக்கு?

வ.செந்தில்குமார்

வேலூரில் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு ஆட்சியில் பொம்மு நாயக்கர்களால் தரைப்பகுதியில் கட்டப்பட்ட கோட்டை இன்றளவும் இந்தியாவின் ஆகச் சிறந்த அகழியுடன் கூடிய கோட்டைகளில் ஒன்றாக உள்ளது.

1806-ல் வேலூர் கோட்டையில் நடைபெற்ற முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டம், நூற்றாண்டு புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனை, நூறாண்டுகளைக் கடந்த மார்க்கெட், வேலூரிலிருந்து முதல் உலகப் போருக்குச் சென்ற வீரர்கள் நினைவாகக் கட்டப்பட்ட மணிக்கூண்டு, வேலூர் கோட்டையில் 150 ஆண்டுகள் பழமையான செயின்ட் ஜான்ஸ் தேவாலயம், 125 ஆண்டுகள் பழமையான ஊரீசு கல்லூரி, இங்கிலாந்தின் மகாராணி விக்டோரியாவின் 50-வது ஆண்டு ஆட்சியாண்டை சிறப்பிக்கும் வகையில் வேலூரில் நிறுவப்பட்ட விக்டோரியா நினைவுத்தூண் என ஆங்கிலேயர்களின் வரலாற்று அடையாளங்களை இந்த நகரம் தாங்கியுள்ளது. சென்னை - பெங்களூரு நகரங்களுக்கு இடையில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக வேலூர் உள்ளது.

ஹாட்ரிக் எம்எல்ஏக்கள்

1952-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்து வரும் வேலூர் தற்போது 17-வது தேர்தலைச் சந்திக்கிறது. இதுவரை காங்கிரஸ் 4, திமுக 7 முறையும், அதிமுக 2 முறையும், தமாகா 2 முறையும் சுயேட்சை ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். 1980, 1984, 1989-ல் வி.எம்.தேவராஜி, 1991, 1996, 2001, 2006-ல் சி.ஞானசேகரன் ஆகியோர் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். 1957 மற்றும் 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் மா.பா.சாரதி வெற்றி பெற்றுள்ளார்.

2026 தேர்தல் களம்

நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ப.கார்த்திகேயன் மூன்றாவது முறையும், அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக எஸ்.ஆர்.கே.அப்புவும் போட்டியிடுகின்றனர். தெவகவில் வினோத் கண்ணன், நாம் தமிழர் கட்சியில் கல்லூரி மாணவி சோனியா உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சிக்குள் கடுமையான அரசியல் உள்குத்து இருந்தாலும் களத்தில் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

தவெக வேட்பாளர் வார்டு வார்டாக விசில் ஊதி வாக்கு சேகரித்து வருவதால் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார் என்ற கவலை திமுக, அதிமுகவினர் இடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது. நாதக வேட்பாளராகப் போட்டியிடும் கல்லூரி மாணவி சோனியா, வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் பணி மெச்சத்தகுந்ததாக உள்ளது. தொகுதியில் முதலியார்கள், வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள் முக்கிய சமூகங்களாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றனர்.

நீண்ட நாள் கோரிக்கைகள்

* கிரீன் சர்க்கிள் தொடங்கி பாகாயம் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும்.

* சேண்பாக்கம், அலுமேலுரங்காபுரம், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் சர்க்குலர் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை முடிக்க வேண்டும்.

* வேலூர் மாநகரில் குப்பைக் கிடங்கு இல்லாமல் பாலாற்றைக் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

* விரைவில் பாதாளச் சாக்கடை திட்டத்தை முடித்து பாலாற்றில் நகரின் கழிவு நீர் கலப்பதை நிறுத்த வேண்டும்.

* அலுமேலுரங்காபுரம், பெருமுகை உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

* கஸ்பா, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுச் சுகாதார வளாகங்களை மேம்படுத்த வேண்டும்.

இதுவரை வென்றவர்கள்

  • 1952 - மாசிலாமணி செட்டி / ஜெகன்நாதன் - காங்கிரஸ் (இரட்டை பதவி முறை)

  • 1957 -மா.பா.சாரதி - சுயேட்சை

  • 1962 - ஆர்.ஜீவரத்தினம் - காங்கிரஸ்

  • 1967 - மா.பா.சாரதி - திமுக

  • 1971 - மா.பா.சாரதி - திமுக

  • 1977 - ஏ.கே.ரங்கநாதன் - அதிமுக

  • 1980 - வி.எம்.தேவராஜ் - திமுக

  • 1984 - வி.எம்.தேவராஜ் - திமுக

  • 1989 - வி.எம்.தேவராஜ் - திமுக

  • 1991 - சி.ஞானசேகரன் - காங்கிரஸ்

  • 1996 - சி.ஞானசேகரன் - தமாகா

  • 2001 - சி.ஞானசேகரன் - தமாகா

  • 2006 - சி.ஞானசேகரன் - காங்கிரஸ்

  • 2011 - வி.எஸ்.விஜய் - அதிமுக

  • 2016 - ப.கார்த்திகேயன் - திமுக

  • 2021 - ப.கார்த்திகேயன் - திமுக

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,03,205

  • பெண் - 1,11,252

  • மூன்றாம் பாலினத்தவர் - 47

  • மொத்த வாக்காளர்கள் - 2,14,504

SCROLL FOR NEXT