தமிழகம்

ரிஷிவந்தியம் தொகுதியில் வெல்லப் போவது யார்?

ந.முருகவேல்

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை தொடங்கி அரசியல் களம் கண்ட விஜயகாந்துக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை அளித்த தொகுதி ரிஷிவந்தியம். ஆன்மிக வரலாற்றுத் தகவலில் தவறாமல் இடம் பிடிக்கும் ரிஷிவந்தியம், சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களின் கலைத் திறனுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் அர்த்த நாரீஸ்வரர் கோயில், ஆதி திருவரங்கம், ஜம்பை கோயில் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது.

இந்தத் தொகுதியில் உள்ள ஈருடையாம்பட்டு கிறிஸ்துவ ஆலயம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மிகவும் பின் தங்கிய பகுதியாக விளங்கும் இத்தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். கரும்பு விளைச்சலும், அவற்றை மதிப்புக் கூட்டும் சர்க்கரை ஆலைகளும் நிறைந்த தொகுதி இது.

விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்தபகுதியாக உள்ளது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட மணிமுக்தா அணையும் இந்தத் தொகுதியில் உள்ளது. 1962-ல் உருவாக்கப்பட்டது ரிஷிவந்தியம் தொகுதி. 1962, 1967, 1977, 1984, 2006 என 5 முறை காங்கிரஸ், 1996, 2001 என இருமுறை தமாக, 1967, 1971, 1989, 2016,2021 என 5 முறை திமுக, 1991-ல் அதிமுக, 2011-ல் தேமுதிக இந்தத் தொகுதியை கைப்பற்றியுள்ளன. இதில் எஸ்.சிவராஜ் இருமுறை காங்கிரஸ், இருமுறை தமாக மூலம் போட்டியிட்டு, 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

சட்டப்பேரவை தொகுதி மறுவரையரைக்குப் பின் 2011-ல் நடைபெற்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அதையடுத்து நடைபெற்ற இரு தேர்தல்களிலும் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார் திமுகவைச் சேர்ந்த வசந்தம் கார்த்திக்கேயன். தற்போது நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் வசந்தம் கார்த்திக்கேயன், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் செழியன், தவெக சார்பில் அசோக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ராதிகா என 4 முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் திமுக - பாமக வேட்பாளரிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

திமுக வேட்பாளரான வசந்தம் கார்த்திக்கேயன், தொகுதிவாசிகளிடம் நெருக்கமாக இருந்து வருகிறார். தொகுதியில் உள்ளவர்களின் வீட்டு விசேஷம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஆன்மிகப் பணிகளுக்கான நன்கொடைகள் வழங்குவது, இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிக ளுக்கான உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற செயல்களால் முக்கியஸ்தர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருப்பதை தனது கூடுதல் பலமாக கருதுகிறார்.

வானாபுரம் வட்டத்தை உருவாக்கியது, ரிஷிவந்தியம் தொகுதியில் அரசுக் கலைக் கல்லூரிக்கான புதியக் கட்டிடம், சார் - பதிவாளர் அலுவலகக் கட்டிடம், கூவனூர் மேம்பாலம், மணலூர்பேட்டையில் தகடி ஓடை குறுக்கே பாலம், தென்பெண்ணையாற்றில் தடுப்பணை, ஆதிதிரவங்கம் கோயில் புனரமைப்புப் பணிகள், ஜி. அரியூரில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை, சிறு பாலங்கள், ஆசனூர் - திருக்கோவிலூர் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தியது என கடந்த 5 ஆண்டுகளில் செய்தவற்றை எடுத்துக் கூறி திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் களமிறங்கியுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபரான பாமக வேட்பாளர் செழியன், திமுக வேட்பாளரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வேண்டும் ஆவலில் அதிமுகவினர் அவரை வீதி வீதியாக அழைத்துச் சென்று, திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அதிமுகவி னரின் சுறுசுறுப்புக்கு, பாஜக மற்றும் பாமகவினர் ஈடு கொடுக்கவில்லை என்ற புலம்பலும் கூட்டணியில் நிலவுகிறது. செல்வாக்கான செழியனுக்கு, பாமக தலைவர் அன்புமணியின் பிரச்சாரம் கை கொடுக்கும் என்கின்றனர் பாமகவினர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராதிகாவும், தவெக வேட்பாளர் அசோக்குமாரும் இளைஞர்களை குறிவைத்து, தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகள், வாணாபுரம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள், சங்கராபுரம் ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் மற்றும் தியாகதுருகம் ஊராட்சியில் 2 ஊராட்சிகள் என மொத்தம் 116 ஊராட்சிகளை உள்ள டக்கியது ரிஷிவந்தியம் தொகுதி.

மிகவும் பின்தங்கிய தொகுதியான இத்தொகுதி முற்றிலும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். வாணாபுரம் பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அறிவிப்போடு நிற்கும் அரசுப் பேருந்து பணிமனையை திறக்க வேண்டும். வாணாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது பிரதான கோரிக்கைகளாக உள்ளது.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,35,292,

  • பெண் - 1,35,198

  • மூன்றாம் பாலினத்தவர் - 51

  • மொத்த வாக்காளர்கள் - 2,70,541

SCROLL FOR NEXT