கடலூர்: புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிக பெண் வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக உள்ளது. ராகவேந்திரர் அவதரித்த ஊர் இது. சேத்தியாத்தோப்பில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. மேலும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதுதவிர பெரும்பாலான மக்கள் பட்டு, கைத்தறி புடவைகள், கைலி உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கும் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். புவனகிரி தொகுதியில் இடம்பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
புவனகிரி, சேத்தி யாத்தோப்பு, கங்கைகொண்டான் பேரூராட்சிகளும், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியமும், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி யில் இடம்பெற்றிருந்த கீரப்பாளையம், மேல்புவனகிரி ஒன்றியம் முழுவதும் இணைத்து புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியாக உருவாக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியில் 304 வாக் குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை வென்றவர்கள்
1952-ல் வி.கிருஷ்ணசாமி படையாச்சி (இந்திய தேசிய காங்கிரஸ்), 1957-ல் சாமிக்கண்ணு படையாச்சி (இந்திய தேசிய காங்கிரஸ்), 1962-ல் ராமச்சந்திர ராயர் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1967-ல் ஏ.கோவிந்தராசன் (திமுக), 1971-ல் எம்.ஏ.அபுசாலி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 1977-ல் வி.ரகுராமன் (திமுக), 1980-ல் வி.வி.சாமிநாதன் (அதிமுக), 1984-ல் வி.வி.சாமிநாதன் (அதிமுக), 1989-ல் எஸ்.சிவலோகம் (திமுக), 1991-ல் ஜி.மல்லிகா (அதிமுக), 1996-ல் ஏ.வி.அப்துல் நாசர் (இந்திய தேசிய லீக்), 2001-ல் பி.எஸ்.அருள் (அதிமுக), 2006-ல் செல்வி ராமஜெயம் (அதிமுக), 2011-ல் செல்வி ராமஜெயம் (அதிமுக), 2016-ல் துரை.கி.சரவணண் (திமுக), 2021-ல் ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக).
மக்களின் எதிர்பார்ப்பு
அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். வெள்ள காலத்தில் விவசாய பயிர்களை பாதிக்காமால் இருக்கும் சிறப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். புவனகிரியில் தீயணைப்பு நிலையம் கொண்டு வர வேண்டும். நீதிமன்றம் கொண்டு வர வேண்டும். வெள்ளாற்றில் உப்பு நீர் உட்புகாதவாறு தடுப்பணை கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன் வைக்கின்றனர். வன்னியர், ஆதிதிரவிடர், யாதவர், செட்டியார் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் குறைந்த அளவில் உள்ளனர். தற்போது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவன், நாதக சார்பில் சுமதி சீனுவாசன், தவெக சார்பில் மகாலிங்கம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி உள்ளது.
திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் மற்றும் கூட்டணி கட்சியினர் திமுகவின் தேர்தல் அறிக்கை, திமுக அரசின் சாதனைகளான மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகையை ஹைலட்டாக்கி களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக வேட்பாளர் ஏ.அருண் மொழிதேவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கடந்த அதிமுக ஆட்சியின் போது தொகுதியில் செய்யப்பட்டுள்ள திட்டப் பணிகள, இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் குரல் கொடுத்ததையும், என்எல்சி நில எடுப்புக்கு எதிராக போரட்டம் நடத்தியதையும், அதிமுக தேர்தல் அறிக்கையும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தினர், நாம் தமிழர் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,15,772
பெண் - 1,17,468
மூன்றாம் பாலினத்தவர் - 19
மொத்த வாக்காளர்கள் - 2,33,259