சென்னை: தமிழகம் தொடர்ந்து 2-வது நிதியாண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2025-26-ம் நிதியாண்டில் தமிழகம் 10.83 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
முந்தைய ஆண்டில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதமாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது.
தனிநபர் வருமானம் உயர்வு
இதுதவிர தமிழகத்தின் தனிநபர் வருமானம் தற்போது ரூ.4.08 லட்சமாக உயர்ந்துள்ளது. தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூ.2.05 லட்சமாக உள்ள நிலையில், நமது மாநிலத்தின் வருமானம் அதைவிட அதிகமாக உள்ளது.
அரசு செயல்படுத்திய பல்வேறு புதிய திட்டங்களால் ஒவ்வொரு துறைகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியால் இந்த சாதனையானது மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
தேசிய சராசரியைவிட தமிழகம் அடைந்துள்ள இந்த சாதனைக்கு தொழில்துறை 10 சதவீதமும், சேவைத்துறை 8.5 சதவீதமும், வேளாண் துறை 6.7 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளதும் முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
அதேபோல், தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024-25-ல் ரூ.31.19 லட்சம் கோடியாக இருந்தது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை எட்டுவதற்கான பாதையை இவை மென்மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகம் தொடர்ந்து இரு ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.