சென்னை: வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு அபாயங்கள் (சிபிஆர்என்) தொடர்பான போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 13-வது பட்டாலியனைச் சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணியினரை, ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆர்.தினகரன் பாராட்டினார்.
2026-ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான ‘சிபிஆர்என்’ போட்டி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10-வது பட்டாலியனில் கடந்த 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 13-வது பட்டாலியனைச் சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணியினர், துணைத் தளவாய் எஸ்.மணிமாறன் தலைமையில் 2 எஸ்ஐ-க்கள் மற்றும் 17 காவலர்கள் என மொத்தம் 20 பேர் பங்கேற்றனர். போட்டியில் திறமையாக செயல்பட்ட தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை, தமிழக காவல்துறை ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.தினகரன் நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும, வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆவடி படைப் பயிற்சி மையத்தின் தளவாய் எஸ். விஜயகுமாரும் கலந்து கொண்டார்.
தேசிய போட்டியில் பங்கேற்பு:
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணியினர், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8-வது பட்டாலியனில் நவம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு அபாயங்கள் (சிபிஆர்என்) தொடர்பான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற மண்டல அளவிலான மற்றும் தேசிய அளவிலான சிபிஆர்என் போட்டிகள் ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 13-வது பட்டாலியனைச் சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.