தமிழகம்

“தமிழகத்தில் ஆட்சியில் பங்கு: ஸ்டாலினும், ராகுலும் முடிவு செய்வார்கள்” - சொல்கிறார் செல்வப்பெருந்தகை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸாரும், பங்கு இல்லை என திமுகவும் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பேசி முடிவெடுப்பார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. மகளிரணி மாநில தலைவி ஹசீனா சையத் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஒரு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி நாளை (ஜன.13) வருகிறார். கூட்டணி கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எல்லோருக்கும் கருத்துரிமை இருக்கிறது. அவரவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சியில் பங்கில்லை என அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார். காங்கிரஸார் கூட அவர்களின் கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால் முடிவு செய்ய வேண்டியது தமிழகத்தில் இந்தியா கூட்டணி தலைவராக இருக்கும் முதல்வர் ஸ்டாலினும், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியும் தான். அவர்கள் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள்.

கரூர் துயரம் தொடர்பாக தமிழக அரசு சிறப்பாக விசாரித்துக் கொண்டிருந்தது. நியாயமான விசாரணை நடந்திருக்கும். சிபிஐ விசாரணை என்ற பெயரில் பாஜக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, துன்புறுத்தி விஜய்யை சென்னையில் இருந்து டெல்லிக்கு வரவழைத்து அரசியல் ஒப்பந்தத்துக்கான முயற்சியை செய்கிறார்கள். இதில் ஒருபோதும் பாஜக வெற்றிபெறாது. அவர்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் அனைத்தும் செய்வார்கள். விஜய்க்கு சிங்கம் வாயில் மாட்டிக் கொண்டது போல் ஆகிவிட்டது. பாஜகவை எதிர்த்தால் ஊழல் வழக்கு போடுவார்கள். அவர்களுடம் இணைந்து விட்டால் புனிதர்களாக பட்டம் கொடுத்துவிடுவார்கள். இதுதான் கடந்த கால வரலாறு.

பராசக்தி திரைப்படம் தொடர்பாக பாஜக அண்ணாமலை ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அது ஒரு கடந்த கால போராட்ட வரலாறு. அண்ணாமலை அவரது கட்சிக்கு விசுவாசமாக இருக்கச் சொல்லுங்கள். எங்கள் கட்சியை பற்றி பேச வேண்டாம். ஒவ்வொரு கட்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சி தான்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT