மதுரை: மேலூரில் ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் பெருங்கூட்டமாக திரண்டு மனுக்கள் அளி்க்க திட்டமிட்டதால், அமைச்சர் பெ.விஸ்வநாதனின் மேலூர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களின் போராட்டத்தை தவிர்க்க நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஆன்லைன் (எஃப்க்யூஎல், விஜி) செயலி மற்றும் கிரிப்டோ கரன்ஸி வர்த்தகம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் முதலீடுகளை வசூலித்து மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக, மேலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மட்டும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலூர் சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான பெ.விஸ்வநாதன் தனது தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. அப்போது, பாதிக்கப்பட்டோர் அவரிடம் முறையிட திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. இதனால் தவிர்க்க முடியாத பணி காரணமாக அமைச்சரின் மேலூர் வருகை திடீரென ரத்தானதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், பாதிக்கப்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை மீட்பது குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, எஸ்பி தேவநாதன் ஆகியோருடன், மதுரையில் நேற்று அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.