சென்னை: வியட்நாமில் தீவுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த தமிழர்கள் உள்பட இந்திய சுற்றுலாப் பயணிகளில் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளோர்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?
வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ள ஹான் மே ருட் ங்வோய் தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லை பாதுகாப்புப் படை, கடற்படை, கடலோர காவல் படை ஆகியவை மீட்புப் பணியில் இணைவதற்கு முன்பே அப்பகுதியில் இருந்த மற்ற படகுகளில் இருந்தவர்கள், பாதிக்கப்பட்ட பயணிகளை நீரில் இருந்து மீட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் பெரிய அலைகள் இருந்ததாலும், பலர் படகுக்குள் சிக்கிக்கொண்டதாலும் மீட்புப் பணி சவாலாக இருந்ததாக வியட்நாமின் 'விஎன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
பழநியைச் சேர்ந்தவர் பலி:
வியட்நாமில் நடந்த விபத்தில் பழநியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் முருக பிரபு (43) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் நிர்மல் குமார் (42) உயிருடன் மீட்கப்பட்டார்.