முதல்வர் விஜய்
சென்னை: “எளிய பின்னணியைக் கொண்டவர்களை மக்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். மேலும், எம்எல்ஏக்கள் தங்களுக்கென்று ஓர் உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்” என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று அறிவித்தார்.
கோரிக்கையும், வாக்குறுதியும்..
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 12-ம் தேதி பேசிய விசிக எம்எல்ஏ ஜோதிமணி, “பொருளாதார வசதி இல்லாததால் என்னிடம் கார் இல்லை. அதனால் என்னுடைய தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. வாடகைக்கு வாகனம் எடுத்தே செல்ல வேண்டியதாக உள்ளது. என்னைப்போல பல சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கின்றது. அரசு இதனை கவனத்தில் கொண்டு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும்” என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், “முதல்வரின் கரங்கள் கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல, அள்ளிக் கொடுக்கும் கரங்கள். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வானவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்தன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று (ஆக.19) கூடியதும், விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய், “கடந்த 12.8.2026 அன்று காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது, பல எம்எல்ஏ-க்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பார்வையிடவும் கடினமாக உள்ளதாகவும், லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி அமைய உறுப்பினர்களின் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
எந்தவொரு பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக் கொள்ள முடிவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக கோரிக்கைகளும் வரப்பெற்றது.
மக்களாட்சியின் மிக முக்கியத் தூண்களில் ஒன்றாக விளங்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், எளிய பின்னணியில் இருந்து பண பலமோ, அரசியல் பின்னணியோ இன்றி மக்களின் பேராதரவோடு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
29.3.2026 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மக்கள் பணி செய்து, ஊழலற்ற, லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தை மேற்கொள்வது என அனைத்து வேட்பாளர்களும் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப, அதே பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
"மக்களுக்கான நிர்வாகம் – நேர்மையின் பாதையில்!" என்ற அடிப்படையில் லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.
தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதைக் கண்காணிக்கவும், தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பயணத் தேவைகளுக்காக பிறரைச் சார்ந்து இருப்பதைத் தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களின் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு எளிதாகப் பயணம் செய்து, தொகுதி முழுவதும் உள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும். அதோடு மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமையை குறைத்து, கடைகோடி மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் என கருதப்படுகிறது.
எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூபாய் 75,000/- வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000/- உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை விசிக எம்எல்ஏ ஜோதிமணி உள்பட உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர். பாமகவும் வரவேற்பு தெரிவித்தது. அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், முதல்வரின் இந்த அறிவிப்பால் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.