சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட் மற்றும் தொழில் துறையினருக்கான சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் பிப்.5-ம் தேதி நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக, ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரியில் முடிந்ததும், பிப்ரவரியில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலும், தேர்தலை கருத்தில் கொண்டே இடைக்கால பட்ஜெட்டை அரசுகள் தாக்கல் செய்யும். அந்த வகையில், பிப்ரவரி 2-வது வாரத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய அறிவிப்புகள், ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம்.
இதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் பிப்.5-ம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், பட்ஜெட் தாக்கலுக்கான நாள், இடம்பெற வேண்டிய முக்கியமான புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கத்துக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இதுதவிர, தொழில் முதலீடுகள் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு காலகட்டங்களில் செய்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவுகின்றன. அந்த நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கும் அமைச்சரவைதான் ஒப்புதல் அளிக்கிறது. அந்த வகையில், பல்வேறு நிறுவனங்களுக்கான ஒப்புதலும் அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.
இது மட்டுமின்றி, தமிழக அரசின் முத்திரைத் திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு செய்து, அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். தமிழக அரசு சார்பில் தொழில் துறை முதலீடுகள் குறித்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில், அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.