சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.31.592 கோடி முதலீட்டில் 46 நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில், தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீட்டு திட்டங்களுக்கான சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தவிர, 1.31 கோடி பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 விடுவிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக நிறுவப்படஉள்ள, விரிவாக்கம் செய்யப்பட உள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்காக ரூ.31,592 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதி அளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.
சக்தி ஏர்கிராஃப்ட் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் பயிற்சி விமான உப பாகங்கள் இணைத்தல், பராமரிப்பு, என்எம்பி - மினேபியா நிறுவனத்தின் செமிகண்டக்டர் உற்பத்தி, விக்ரம் சோலார் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்கலன் சேமிப்பு அமைப்பு (BESS), பாரத்பயோடெக் குழுமத்தின் உயிர் அறிவியல் தயாரிப்புகளுக்கான பூங்கா, போயிங் நிறுவனத்தின் மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம்,செயின்ட் கோபைன் கண்ணாடி தயாரிப்புகள், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் இதில் முக்கியமானவை. இவ்வாறு அவர் கூறினார்.