சென்னை: நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில், ‘வெற்றி’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்திய நிதியமைச்சர் மரிய வில்சன், “முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திலேயே பல துறைகளில் கனிசமான முன்னேற்றங்களும், மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் பல முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெற்றி அது. மக்களின் நலன்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், நமது அரசு அறம், பொருள், இன்பத்தை நோக்கமாக வைத்து 10 தூண்களைக் கொண்ட ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திட்டங்களை அடுத்து வருகிற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டுக்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களை வகைப்படுத்தி, அவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறது” என்றார். தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
>> அனைத்து மாநகராட்சிகளிலும் வீதிகள் மேம்பாடு செய்யப்படும். சாலை இணைப்பு, நடைபாதை, மிதிவண்டிப் பாதை, சீரான குறுக்குவீதி இணைப்புகள் , நவீன எல்.ஈ.டி. தெரு விளக்குகள், பள்ளிகளுக்குப் பாதுகாப்பாகச் செல்வதற்கான பாதைகள் உறுதி செய்யப்படும்.
> கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 'வெற்றி 150' அறிமுகம். 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க உறுதி செய்யப்படும். மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்ய ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> நீர்வளத் துறைக்கு 9,264 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> தமிழ்நாட்டின் நீர் உரிமையை அரசு உறுதி செய்யும். தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை நதிநீர்ப் பங்கீட்டில் தொடர்ந்து பாதுகாக்கும். மேகேதாட்டு உள்ளிட்ட உரிமை பாதிக்கும் திட்டங்களுக்கு உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கப்படும். முல்லைப்பெரியாறு, ஆனைமலையாறு நல்லாறு திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும்.
> நதி இணைப்புத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு. பெண்ணையாறு-செய்யாறு, பெண்ணையாறு-பாலாறு மற்றும் தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்ய ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
> காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு சாத்தியக்கூறு ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் டெல்டா பகுதியின் நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
> சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 1,762 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான ‘வெற்றி வீடு’ திட்டம் அறிமுகம். வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்
> மனித-வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. 100 கிராமங்களில் மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். சூரிய மின்வேலி, எஃகு வேலி உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும். கூடவே, வனப் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். GPS வசதியுடன் கண்காணிப்பு, இரவு நேர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
> மகளிர் சுயஉதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்தும் புதிய திட்டம் ‘சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ அறிமுகம். இந்த ஆண்டில் ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு. தொழில்முனைவோரின் செயல்திறனை வெளிப்படுத்தும் சுயஉதவிக் குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 39,609 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு
> போதையில்லா தமிழகம் உருவாக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு
> உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு 17,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் அமைக்க ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு. இதன் மூலம் 5,000 காவலர் குடும்பங்கள் பயன்பெறுவர்.
> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 11,532 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு 475 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> வணிக வரிகள் துறைக்கு 651 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ. 838 கோடி நிதி ஒதுக்கீடு. அவர்களுக்கான அடிப்படை காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ. 7.5 லட்சமாக உயர்வு. குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூ.12 லட்சம் வரை உயர்வு. அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவி வழங்க ஏற்பாடு.
> ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு 47,240 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> சென்னை பிராட்வேயில் 160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ரூ.1,375 கோடி ஒதுக்கீடு.
> நீதி நிர்வாகத் துறைக்கு ரூ.2486 கோடி ஒதுக்கீடு
> தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. உணவு மற்றும் கலைத் திருவிழா நடத்தப்படும்.
> ஆண்டுதோறும் 2.5 லட்சம் மூத்த குடிமக்கள் விரும்பிய புனிதத் தலங்களுக்கு அரசு ஏற்பாட்டில் பயணம் செய்ய, அதுவும் குளிர்சாதன வசதி, தரமான தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் பயணிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
> 200 சிறந்த கலைக் குழுக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் நிகழ்ச்சி வாய்ப்பு. நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்க ரூ. 23 கோடி நிதி ஒதுக்கீடு
> சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கு ரூ.775 கோடி ஒதுக்கீடு
> இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு.
> சென்னை நதிகள் கூவம் , அடையாறு ஆறுகள் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும். இதற்காகம் விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன்படி படகு சவாரி, நதிக்கரை நடைபாதை, பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சென்னையின் புதிய அடையாளமாக கூவம் , அடையாறு மாற்றப்படும்.
> நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> உலகத்தரம் வாய்ந்த, நீடித்த, பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மை கொண்ட சாலை உட்கட்டமைப்பை வழங்குவது அரசின் முன்னுரிமையாகும். அந்த வகையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.9,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,524 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> சென்னைக்கு 1,000 புதிய AC மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும். பேருந்துப் பணிமனைகளில் EV உட்கட்டமைப்பு (EV DEPOT) மேம்பாடு செய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> போக்குவரத்துத் துறைக்கு மொத்தம் ரூ.13,561 கோடி ஒதுக்கீடு.
போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.7,675 கோடி மானியம் வழங்கப்படும். செயல்திறன் இடைவெளி நிதியுதவி ரூ.2,650 கோடி ஒதுக்கீடு. பங்கு மூலதன உதவி ரூ.1,005 கோடி ஒதுக்கீடு
> சென்னையில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்ள்: விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு -பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் ஆகிய 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும்.
> சென்னை மாநகரின் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்கப்படும். மாநிலத்தில் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில், வணிக நுகர்வோருக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
> டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடியினை ஊக்குவிக்க குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்த ரூ. 5.134 கோடி ஒதுக்கீடு.
> வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு 14,984 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
> மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், 193 லட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடையும்.
> தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (TN Al Mission) மூலம் சுகாதாரம், விவசாயம், கல்வி, குடிமக்கள் சேவைகள், நகர்ப்புர நிர்வாகம் மற்றும் சமூகநல நிர்வாகம் போன்ற துறைகளிலும் தேவையான இதர துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்முயற்சிகளில் தனித்த கவனம் செலுத்தும்
> கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதைத் திட்டம் ரூ.4,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
> அனைத்து இ-சேவை மையங்களும் 'இ-சேவை 2.0' ஆக மேம்படுத்தப்படும். அதிவேக இணையம் கூடுதல் மக்கள்நல சேவைகள். நம்ம அரசு WhatsApp Chatbot சேவைகள் 76-இல் இருந்து 275 ஆக விரிவாக்கம் செய்யப்படும்.
> செயற்கை நுண்ணறிவு, தகவல் ழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு 398 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
> 'வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சூரிய மின்பலகைக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி திட்ட அனுமதி தளம் (Single Platform for Efficient Expedited Development - SPEED) அறிமுகப்படுத்தப்படும். விரைவான, வெளிப்படையான திட்ட அனுமதி வழங்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> எரிசக்தித் துறைக்கு 15,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> 24,131 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவ்வாண்டில் நிறைவு செய்யப்படும். 14,194 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமானம் தொடங்கப்படும். அடிப்படை வசதிகளுடன் தரமான குடியிருப்புகள் வழங்க ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> 5,904 சதுர கி.மீ. பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகர பகுதிக்கான ஓர் விரிவான முழுமைத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பெருநகரப் பகுதியில் விரைவான விரிவாக்கத்திற்கான ஒருங்கிணைந்த திட்டமிடல் மேற்கொள்ளப்படும். இதற்கான நீண்ட கால வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான ஓர் வரைபடம் உருவாக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம் கீழ், குடிநீர், சாலைகள், கழிவுநீர், போக்குவரத்து, பசுமை - மின் ஆளுமை ஒரே திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். 2031-க்குள் உலகத் தர நகரங்களை உருவாக்கும் இலக்கை அடைய ரூ. 2,117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு 1,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு
> சென்னை மின் பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுப்படுத்தப்படும். பசுமை எரிசக்தி வழித்தடம் 2 ,3-ம் கட்டத் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.
விருதுநகர்-கோயம்புத்தூர் 765 கே.வி. மின் பகிர்மானத் திட்டம், கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதைத் திட்டம் ரூ.6,884 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
> 11,760 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக் கையாளும் பசுமை எரிசக்தி வழித்தடம் கட்டம் 3 திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
> ரூ. 1,543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின்நிலையங்கள் உருவாக்கப்படும். ரூ.2,000 கோடியில் 40,000 பழைய மின்மாற்றிகள் மாற்றம் செய்யப்படும்.
> 5 ஆண்டுகளில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்’ கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் இன்பத்தையும் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையிலும், தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் இத்திட்டத்தை வழங்கப்படும். இதற்காக ரூ.560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம் கீழ் MY-HOME திட்டம் சென்னைப் பெருநகரத்தில் அறிமுகம் செய்யப்படும். PPP (Public-Private Partnership) முறையில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
இதன்மூலம் அடுத்த 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள் குறைந்த வருமானக் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான, தரமான குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.
திருநர் நலன்: மாற்று பாலினத்தவருக்காக திறன் பயிற்சி , சுயதொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். 5 மாவட்டங்களில் 'அரண்' தங்குமிடங்கள் அமைக்கப்படும். ரூ.50,000 வரை சுயதொழில் வங்கிக் கடனுக்கு மானியம் வழங்கப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்
நூலகம், யோகா, தியானம் , உள்ளரங்க விளையாட்டு வசதிகள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும்
அங்கன்வாடி மேம்பாடு: 500 சிதிலமடைந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் உறுதி செய்யும் முயற்சிகள் எடுக்கப்படும். பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதிகள் உறுதி செய்யப்படும்.
> 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
> 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கட்டண உதவி வழங்கப்படும்.
> மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். மொத்தமாக ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தொடரும்.
> ஹஜ் பயண மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு.
> கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு.
> கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்ட மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு.
> 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அண்ணனின் சீர்: பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு
> சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்: பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், வாழ்வாதாரத் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள், பள்ளி மற்றும் விடுதி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தப்பட ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரம் உயர்வை உறுதி செய்ய ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ‘ஊரகப் பகுதிகளில் பெண்களுக்காக ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்’
> அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்த ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முன்னவுத் திறனை ஊக்குவிக்கும் திட்டம்.
இதன்மூலம் மூலதண மானியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்க ஆதரவு அளிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யவும் ‘வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்த தமிழ்நாடு 2026- 27 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
> விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்க்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டம், நடப்பாண்டில் 352 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> 10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> 5000 அரசுகப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும்.
> பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> ‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் போதைப் பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
> 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> உயர் கல்வித் துறைக்கு ரூ.8393 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும்.
> போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
> ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழில்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
> 2031-ம் ஆண்டுக்குள் பொறியியல கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.