தமிழகம்

தமிழக பட்ஜெட் 2026-27: சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் மானியம்

20 ஆயிரம் மின்சார வாகன பொது சார்ஜிங் மையங்கள்

செய்திப்பிரிவு

தவெக அரசின் முதல் பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்சன், சட்​டப்​பேரவை​யில் நேற்று தாக்​கல் செய்​தார். அதில் கவனம் ஈர்த்த அம்சங்கள்:

இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம், தற்போதுள்ள 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.1,545 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்துடன்’ இணைந்து, மாநில அரசின் புதிய ‘வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, தங்கள் வீடுகளில் சோலார் பேனல் அமைப்போருக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.8,000 கோடி மதிப்பிலான ஈடிபிஎஸ் விரிவாக்கத் திட்டம் அரசு -தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்தப்படும். ரூ.5,050 கோடி மதிப்பிலான வெள்ளிமலை நீரேற்று புனல் மின்திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும். சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

கோவை - அரியலூர் இடையே ரூ.4 ஆயிரம் கோடியில் 765 கி.வா. மின் பகிர்மானப் பாதை அமைக்கப்படும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.1,390 கோடி செலவிடப்படும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, அடுத்த 5 ஆண்டுகளில் 20,000 பொது சார்ஜிங் நிலையங்கள் அரசு - தனியார் கூட்டாண்மை முறையில் அமைக்கப்படும். இதற்கு நடப்பு ஆண்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும். இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1,543 கோடியில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். ரூ.2,000 கோடியில் 40,000 பழைய மின்மாற்றிகள் மாற்றப்படும். அதன்படி, எரிசக்தி துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.15,828 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் வீட்டு நுகர்வோருக்கான மின் மானியத்துக்காக ரூ.18,860 கோடியும், மின்சார வாரிய இழப்பீட்டு நிதியாக ரூ.5 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT