தமிழகம்

“பட்ஜெட்டில் ஊழலுக்கு இடமில்லை என்பதால் திமுக குறை சொல்கிறது” - தமிழக பாஜக

அனலி

சென்னை: “நிர்மலா சீதாராமன் அறிவித்த மோடி வளர்ச்சி மாடல் 2026-27 பட்ஜெட்டில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் அதில் திமுகவினர் ஊழல் செய்வதற்கான திட்டங்கள் இல்லை, என்பதனால் அவற்றை முதல்வர் மறைக்கப் பார்க்கக் கூடாது” என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய பட்ஜெட் புத்தகத்தை புரட்டிப் பார்க்கக் கூடாது. நல்லெண்ணத்துடன் படித்துப் பார்த்து, தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் தமிழகத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை மனம் திறந்து அரசியல் நாகரீகத்தோடு வரவேற்க வேண்டும்.

இந்தியாவின் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய வகையில் உலகின் முதல் நிலை நாடாக உருவாகும் வகையில் மத்திய பட்ஜெட் 2026-27 உருவாக்கப்பட்டுள்ளது.

          

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் பலவீனமான நாடாக 5 ஆம் நிலையிலிருந்த இந்தியா, மோடி அரசு பதவி ஏற்ற 11 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த ஐந்து நாடுகளில் ஒன்றாக மாறி உள்ளது. நம் தமிழ் சகோதரி நிர்மலா சீதாராமன் இந்த சாதனையை அடைவதற்கு காரணமாக இருந்துள்ளார்.

தமிழன்னையின் தங்க மகளாக, இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முதலாக ஒன்பதாவது முறையாக, சாதனை சிகரமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பெண்கள் பெருமை, நலன் காக்கும் முதல்வர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் ஏன் வாழ்த்து சொல்லவில்லை?

பாஜக தமிழ் பேசினாலும், பாஜகவில் தமிழர்கள் சாதனை புரிந்தாலும், பிரதமர் மோடி இந்திய மக்கள் அனைவரும் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று காசி தமிழ் சங்கத்தில் அறிவித்து இந்தியா முழுவதும் அனைத்து மாநில மக்களும் தமிழைப் பெருமையுடன் மகிழ்ச்சியுடன் கற்றுக் கொண்டாலும் திமுக வரவேற்காமல் அச்சப்படுவது ஏன்?

திருவள்ளுவர் வழியில் திருக்குறள் நெறியில் ஆட்சி செய்யும் பிரதமர், தகுதியுடன் திருவள்ளுவரை, திருக்குறளின் பெருமையை உலகெங்கும் சொல்லி மகிழ்ந்தால் நாடகம் என்று திமுக முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மனசாட்சி இல்லாமல் அவதூறு பிரச்சாரம் தமிழகத்தில் செய்கின்றனர். ஆனால் இந்த பட்ஜெட்டில் ஏன் திருக்குறள் இடம் பெறவில்லை என்று தேர்தல் அரசியலுக்காக கூக்குரல் இடுகின்றனர்.

தலைசிறந்த முதல் நிலை வல்லரசு நாடாக இந்தியா உருவாக்குவதற்கு அடித்தளத்தை அமைக்கும் வகையில் மத்திய பட்ஜெட் 2026-27 உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் தமிழகத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது திமுக மறைக்கப் பார்க்கக் கூடாது.

தமிழ் தமிழகம் தமிழருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழகத்திற்கான தேர்தல் அரசியலுக்காக ரயில்வேத்துறை, சுற்றுலாத்துறை, கனிமவளத்துறை, தமிழகத்தின் மிக முக்கிய பொருளாதாரம் மண்டலங்களாக வளர்ச்சி அடையக் கூடிய வகையில் ராமேஸ்வரம்,மதுரை, காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் போன்ற நகரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், தமிழகத்தின் பண்டைய நாகரீகம் கலாச்சாரம் தொன்மைகளை விளக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி சிறப்புகளை உலகம் முழுதும் கொண்டு போய் சேர்க்கும் திட்டம் என்ன மேலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விரைவில் மத்திய அரசு, தமிழகத்திற்கான பல முக்கிய வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க உள்ளது. பல லட்சம் கோடி திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் அறிவித்தாலும், மோடி என்ன செய்தார்? என்று திரும்பத் திரும்ப அவதூறு பரப்பி , பொய்யை உண்மையாக முயற்சிக்கும் திமுக அரசின் சூழ்ச்சிகள் தமிழக மக்களிடம் இனி எடுப்படாது.

இந்தியாவின் நீண்டகால ஆழமான வளர்ச்சியை முன்னிறுத்தி, உண்மையான பொருளாதாரம் மாற்றத்திற்கான வலிமை தரும் வகையில், நிதி ஒழுக்கத்தை காக்கும் வகையில், நிதி முதலீடுகளை குறைக்காமல், நிதி பற்றாக்குறையை குறித்து, கவர்ச்சிக்கான அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘மோடி மாடல் பட்ஜெட்’ அனைவரிடமும் மகத்தான வரவேற்பையும் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT