சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்யைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நாளை (நவம்பர் 27-ம் ) தீப்பந்த போராட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வு நவம்பர் 20ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கார்த்திகை தீபத் தினத்தில் (நவம்பர் 24ம்) திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்றிட வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்திருந்தது.
நவ.24ம் தேதி மாலை 5.30 மணி வரை தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கண்கட்டி வித்தை நடத்தி, நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டார்கள். உச்ச நீதிமன்ற உத்திரவை காலில் போட்டு மிதித்து, தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் தமிழக மக்கள் மற்றும் பக்தர்களை மோசடி செய்ததோடு, மக்களின் உணர்வுகளை ரணமாக்கியிருக்கிறது தமிழக அரசு. முதல்வர் விஜய்யின் கோழை நிர்வாகம்.
கார்த்திகை தீபம் அன்று திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கொதித்தனர். கொந்தளித்தனர். அவர்கள் மீது முதல்வர் விஜய் போலீசாரை ஏவி, தடியடி நடத்தி, தாய்மார்கள், குழந்தைகள், பக்தர்கள், மூத்த குடிமக்கள் என அனைவரையும் ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர்.
“இந்து மத தத்துவத்தை மதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்” என்று கையெழுத்து போட்டுவிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் மண்டியிட்ட முதல்வர் விஜய், திருப்பரங்குன்றத்தில் இந்துக்களின் மண்டையைப் பிளந்தது நகைமுரண் அல்லவா? பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனா?
இந்து மதத்தை சிதைத்து, இந்துக்களை ஏமாற்றிடும் இரட்டை வேடதாரி முதல்வர் விஜய்யைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தீப்பந்த போராட்டத்தை பாஜக நாளை (வெள்ளிக்கிழமை) நடத்தவிருக்கிறது. 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழகம் முழுவதும் இருக்கின்றன. ஒன்றியம், பேரூர், நகரம், பெருநகரம், மாவட்ட தலைநகரம் ஆகியவற்றை நோக்கி இந்த தீப்பந்தப் போராட்டம் நடைபெறும்.
காலை 10 மணிக்கே கரங்களில் தாமரைச் சின்னம் பொறித்த பாஜக கொடியை ஏந்தி, போர்ப் பரணி பாடி, புலிநிகர் இளைஞர்கள் அணிவகுத்திட அழைக்கிறேன். அவுரங்சீப், இந்து மதத்தை எப்படி சிதைத்து சீர்குலைத்தானோ அதே நிலைமையை தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் ஏற்படுத்தியிருக்கிறார். இது பொறுப்பதற்கில்லை.
குட்டக் குட்ட குனிகிறவனும் முட்டாள், குனியக்குனிய குட்டுகிறவனும் முட்டாள், என்பதைப் போல தமிழக மக்கள் பொங்கி எழுந்திட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத ஜோசப் விஜய் அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டியதுமில்லை! அரசை மதிக்க வேண்டியதுமில்லை!
தமிழக கிராமங்கள்தோறும் நகரங்கள்தோறும், கோயில்கள் இருக்கும் இடமெல்லாம் விண்ணதிர முழக்கங்கள் எழவேண்டும். இந்தியாவின் புகழை உலகளவில் கொண்டு செல்லும் நாம்; தமிழகம் முழுவதும் பரப்பிட உறுதி ஏற்போம்!
இனி - தமிழ்நாட்டில் ஒவ்வொரு பொழுதும் போராட்டம்தான்; காவல்துறை உத்திரவை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை - உச்சநீதிமன்றத்தை அவமதித்திருக்கின்ற தமிழ்நாடு அரசுக்கு - நம்மை கட்டுப்படுத்திட அதிகாரமில்லை! சட்டத்தின் ஆட்சியை மதிக்காத தரங்கெட்ட ஆட்சியை அகற்றிடும் வரை பிரதமர் மோடியின் படை ஓயாது! உறங்காது!