புத்தகத்தை ஏந்த வேண்டிய தமிழக இளைஞர்கள், ஆயுதங்களை ஏந்தி பொதுமக்களின் பாதுகாப்பை பறிக்கும் குற்றவாளிகளாகின்றனர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியால் தமிழகத்தில் போதைப் புழக்கமும் வன்முறையும் தலைவிரித்தாடுகிறது. விழுப்புரத்தில் கஞ்சா போதையில் அராஜகம் செய் தோரைத் தட்டிக்கேட்ட 4 வாலிபர்களை போதை கும்பல் அரிவாளால் தாக்கிய காணொளியும், செங்கல்பட்டில் கஞ்சா போதை கும்பல் ஒன்று சிறுவர்களையும் இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கி அச்சுறுத்தும் காணொளியும் வெளியாகியிருப்பது பதைபதைக்கச் செய்கிறது.
ஐந்தாண்டுகளாகத் தெரு வெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா புழக்கத்தால், புத்தகத்தை ஏந்த வேண்டிய தமிழக இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர். திறனற்ற நிர்வாகத்தால், தமிழகத்தை போதைப் பொருட்களின் கூடாரமாக மாற்றிய திமுக.
இனி ஒரு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், தமிழகமே வன்முறையின் தொட்டிலாக மாறிவிடும். எனவே, தமிழகத்தைக் காக்க திமுகவை நிராகரிப்போம். போதையில் இருந்து இளைஞர்களை மீட்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.