சென்னையில் மத்திய அமைச்சர் ஜே பி நட்டா தமிழக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உடன் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை. படம்: ம.பிரபு
மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாஜக முன்னாள் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வெளியிட்டார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருமுறை நிதியுதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘ஜீரோ எப்ஐஆர்’ முறை அமல்படுத்தப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பின்மை காரணமாக கல்விக் கடன் கட்ட முடியாதவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். முருகப் பெருமானின் புகழைப் போற்றும் வகையில் ‘தைப்பூசம்’ மாநில விழாவாகக் கொண்டாடப்படும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் நிலைநாட்டப்பட்டு, அது தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
திமுக ஒரு குடும்ப நிறுவனம்: நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா பேசுகையில், “கலாச்சாரத்தின் தொட்டிலாகத் திகழும் தமிழகத்தை, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இன்று ‘குற்றங்களின் தலைநகராக’ மாற்றிவிட்டன. தமிழகம் ஒருபோதும் தோல்வியடைந்தது இல்லை.
ஆனால் திமுக அரசு தமிழகத்தைத் தோல்வியடையச் செய்துள்ளது. ஒட்டுமொத்த மாநிலமும் வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் எதிராகக் கொதித்துக் கொண்டிருக்கிறது. திமுக என்பது ஒரு அரசியல் கட்சியே அல்ல, அது ஒரு குடும்ப நிறுவனம். ஸ்டாலின் தலைமையில், உதயநிதி வாரிசாக, கனிமொழி கூட்டாளியாக, சபரீசன் மேலாளராக என ஒரு குடும்பமே கட்சியை ஆக்கிரமித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 56 சதவீதம் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.. முந்தைய தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்தைக்கூட திமுக நிறைவேற்றவில்லை. சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதிலும், இந்துக்களை அவமதிப்பதிலுமே திமுக அரசு குறியாக உள்ளது,” என தெரிவித்தார்.
அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “1950, 60 -களின் திமுகவைப் பார்க்க வேண்டியிருக்கும் என்றும், நாட்டின் பிரதமருக்கு கடைசி எச்சரிக்கை என்றும் முதல்வர் பேசுவது, அவர் வகிக்கும் அரசியல் சாசனப் பதவிக்கு அழகல்ல. தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் திட்டமிட்டுப் பொய் பரப்புகிறார்.
தமிழகத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையாது. எம்.பி.க்களின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 543 இடங்களை 816-ஆக உயர்த்தும் பட்சத்தில், எம்.பி.க்கள் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயரவே வாய்ப்புள்ளது” என்றார்.