சென்னை: “திமுகவினர் மன்றாடியதால் பிரச்சாரத்தில் போனால் போகிறது என்று ஸ்டாலின் பெயரை குறிப்பிட்ட ராகுல், ஸ்டாலினை முதல்வராக்குங்கள் என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை” என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் இன்று முடிகிறது. அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பது பிரசாரத்தில் கண் கூடாகப் பார்க்க முடிகிறது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
சென்னை, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கோவை என பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஒற்றுமை களத்திலும் எதிரொலித்து வருவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
திமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விரும்பவில்லை. ஆனால், இடைத்தரகர் ப.சிதம்பரம் வாயிலாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிடித்து குறுக்கு வழியில் காங்கிரஸுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி அமைத்தார்.
ஆனாலும் ராகுல் காந்தியின் கோபம் தீரவில்லை. அதனால்தான், கடந்த 18-ம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி மாவட்டங்களிலும், 20-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். ஆனால், எங்கும் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் இருக்கவில்லை.
பொன்னேரியில் பிரச்சாரத்தை துவக்கிய ராகுல் காந்தி தனது முதல் உரையில் திமுக தலைவர் ஸ்டாலின் பெயரையே குறிப்பிடவில்லை. அதன்பிறகு போனால் போகிறது என்று திமுகவினர் மன்றாடியதால் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டாலும், ஸ்டாலினை முதல்வராக்குங்கள் என ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை.
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், திமுக தலைவர் ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, வேலை இருக்கிறது எனக்கூறி பாதியிலேயே கார்கே வெளியேறி விட்டார். தனக்கு தானே சர்வாதிகாரி என அறிவித்துக் கொண்ட ஸ்டாலினுக்கு காங்கிரஸ் அளித்த மரியாதை இதுதான்.
கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்த ராகுலுக்கு திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் சால்வை அணிவிக்க வந்தபோது அதை ஏற்க ராகுல் காந்தி மறுத்து விட்டார். அதனால்தான் ராகுல் காந்தியை கடுமையாக எதிர்த்து வரும் பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை கூட்டி வந்து தனது புகழை பாட வைத்துள்ளார் ஸ்டாலின்.
திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, "திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை, போதை பொருள் விற்பனை தவிர வேறு என்ன குற்றச்சாட்டுகளை கூற முடியும்?" எனக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளார்.
இப்படி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் வேண்டா வெறுப்பாக ஏதோ கூட்டணி வைத்தோம். பிரச்சாரம் செய்தோம் என கடைக்கு டீ ஆற்றி வருகின்றன.
திமுக ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த கோபத்தை ஏப்.23-ம் தேதி வியாழக்கிழமை காட்டுவார்கள். இன்னும் 15 நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் புதிய ஆட்சி அமையும். திமுக கூட்டணி படுதோல்வி அடையும்” என்று அவர் கூறியுள்ளார்.