தமிழகம்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக பாஜக - காங்கிரஸ் தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக தனது எக்ஸ்தளப் பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தின் எந்த உரிமைகளைப் பறித்தது? என்பதற்கு பதில் கூற முடியாத மாணிக்கம் தாகூர், எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். கச்சத்தீவை தாரைவார்த்து தமிழக மீனவர்களை வஞ்சித்தது அன்றைய பிரதமர் இந்திராகாந்தி.

தமிழகத்துக்கு துரோகம்

எமர்ஜென்சி என்ற பெயரில் மாநிலங்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரித்ததும், சட்டப்பிரிவு 356-ஐப் பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளைக் கவிழ்த்ததும் காங்கிரஸ் கட்சி.

காவிரி பங்கீட்டில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது. முல்லை பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை பிற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்தது, தற்போது மேகேதாட்டு அணை கட்டுவதாகக் கூறி, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதும் காங்கிரஸ் கட்சியே.

இப்படி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்த காங்கிரஸ் கட்சி, தற்போது மாநில உரிமைகளைப் பற்றி பேசுகிறது? எப்போதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் காவிரி, மேகேதாட்டு பிரச்சினைகளும் வருகின்றன.

பல ஆண்டுகள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு நல்லது செய்வதைப் பற்றி யோசிக்காமல், தமிழக மக்களுக்கு மீண்டும் எப்படி துரோகம் செய்யலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாற்றாந்தாய் மனப்பான்மை

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ‘மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்’ என எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முழங்கியதை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மறந்துவிட்டார்.

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இரு மாநிலப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பிரதமர் மோடி, தன் கடமையைச் செய்யாமல் தமிழகத்தை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்.

ராகுல் காந்தியும், மல்லிகார் ஜுன கார்கேவும் மத்தியில் ஆட்சியில் இல்லை. அதிகாரம் கொண்ட மத்திய அரசுதான் இதற்கு தீர்வு காண வேண்டும். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு என தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் ஆதாரமற்ற குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் திருடியது குறித்து நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஊழல் பற்றி பாஜக பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது போல்' உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT