சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் வினோத்.
சென்னை: தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் நேற்று தாக்கல் செய்தார். நடப்பு ஆண்டில் வேளாண்மைத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.58,374 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடியில் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், 2026-27-ம் நிதி ஆண்டுக்கான தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் ஆர்.வினோத் நேற்று தாக்கல் செய்தார். காலை 9.31 மணிக்கு பட்ஜெட் உரையைத் தொடங்கி 11.38 மணிக்கு நிறைவு செய்தார்.
பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நிலையான வேளாண்மையை உருவாக்குவதே தவெக அரசின் நோக்கம். உழவர் நலன், விவசாயிகளின் வருமான உயர்வு, நீர்வள மேம்பாடு, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் வணிகம் ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியை 131 லட்சம் டன்னாக உயர்த்தவும், நடப்பு ஆண்டில் 125 லட்சம் டன்னை எட்டவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத் திட்டங்களுக்காக நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.58,374 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.17,000 கோடியில் பயிர்க்கடன் வழங்கவும், கால்நடை, மீன் மற்றும் தேனீ வளர்ப்புக்கான குறுகியகால கடன்களாக ரூ.3,000 கோடி வழங்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மண் வளத்தை மேம்படுத்த ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ எனும் ஐந்தாண்டு திட்டம் ரூ.600 கோடியில் செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் இதற்கு ரூ.122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பசுந்தழைகளை மடக்கி உழுது மக்கச்செய்ய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,000 வீதம் உழவு மானியம் வழங்கப்படும். இதற்காக மாநில நிதியில் இருந்து ரூ.63.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்வளத்தைப் பாதுகாக்கவும், ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கவும் ஒரு லட்சம் ஏக்கருக்கு தேவையான திரவ உரம் வழங்க ரூ.4.50 கோடி ஒதுக்கீடு.
உயிர்ம வேளாண்மையை (ஆர்கானிக்) பரவலாக்க, 20 ஆயிரம் ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு.
4 லட்சம் விவசாயிகளுக்கு மண்நல அட்டைகள் வழங்க ரூ.10.16 கோடியும், நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் அமைக்க ரூ.10 கோடியும் ஒதுக்கீடு.
நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களில் 10 லட்சம் விவசாயிகளுக்கு சான்று விதைகள் வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க 24,000 விவசாயிகளுக்கு ரூ.227 கோடி மானியம் அளிக்கப்படும்.
வேளாண் நடைமுறைகளை தொடக்கம் முதல் நிறைவு வரை இயந்திரப்படுத்தும் நோக்கில் மக்காச்சோளம், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு 225 ஏக்கரில் நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்க ரூ.46.30 லட்சம் ஒதுக்கீடு.
‘வெற்றி வான்மகள்’ திட்டத்தின் கீழ் 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் பயிற்சி வழங்க ரூ.1.50 கோடியும், பயிற்சிபெற்ற பிறகு ட்ரோன் வாங்க 50 மகளிருக்கு 50 சதவீத மானியமாக ரூ.2.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஏற்றுமதி சந்தையுடன் 1,000 விவசாயிகளை இணைக்க ரூ.6 கோடியில் 4 மையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் மா, மஞ்சள், மிளகாய் ஏற்றுமதிக்கான தொழில்நுட்ப வசதிகள் செய்து தரப்படும்.
தென்னை விவசாயிகளின் நலனுக்காக ரூ.16 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் தென்னை நோய் தடுப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடியும் அடங்கும். நிலையான சந்தைவாய்ப்பை உருவாக்க ரூ.22.30 கோடியில் ‘தென்னை பதப்படுத்தும் கழகம்’ அமைக்கப்படும்.
500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க மானியம் மற்றும் கடனுதவி, 50,000 கன்றுகளுக்கு தாது உப்புக் கலவை வழங்க மானியம் வழங்கப்படும்.
வறட்சித் தணிப்புத் திட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.111 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையம், வேளாண் வணிக வழிகாட்டு மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் வினோத் தெரிவித்தார். கழுத்தில் பச்சைத் துண்டு அணிந்து அவர் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். ரூ.58,374 கோடிக்கு வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ல் வேளாண் பட்ஜெட்டின் மதிப்பு ரூ.45,661 கோடி. அதை விட ரூ.12,713 கோடி கூடுதலாக இந்த ஆண்டில் வேளாண் பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று முதல் தொடங்க உள்ளது.