ஸ்ரீரங்கம் சோமரசம்பேட்டையில் எஸ்ஐஆர் படிவங்களை செல்போன் செயலியில் பதிவேற்றும் பிஎல்ஓக்கள், தன்னார்வலர்கள் | படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: எஸ்ஐஆர் பணிகளை திறம்பட மேற்கொள்வதில் தமிழக அளவில் 8-வது இடத்திலிருந்த திருச்சி மாவட்டம் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) பணி நவ.4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணைய கணக்குப்படி 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 கோடியே 20 லட்சத்து 80,532 வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் முன்நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 3 கோடியே 72 லட்சத்து 57,812 படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பிஎல்ஓ ஆப்) செயலியில் (டிஜிட்டல்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 23,68,968 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமையில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2,543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி, அதனை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்று, பிஎல்ஓ செயலியில் செல்ஃபோன் மூலம் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நவ.25-ம் தேதி வரை 22,74,733 படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, 15,38,829 பூர்த்தி செய்த படிவங்கள் பிஎல்ஓ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7,35,904 படிவங்கள் பிஎல்ஓ செயலியில் பதிவேற்றும் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. தவிர, 94,235 படிவங்கள் இன்னும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படாமல் உள்ளது.
எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதில் தமிழக அளவில் கடந்த 3 தினங்களுக்கு முன் 8-வது இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம் நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் எஸ்ஐஆர் பணிகளை திறம்பட மேற்கொள்ளும் மாவட்டங்களை தேர்தல் ஆணையம் வரிசைப்படுத்தி உள்ளது.
அதன்படி தமிழக அளவில் முதல் 10 இடங்களில் உள்ள மாவட்டங்கள் சதவீத அடிப்படையில் வருமாறு:
திருவண்ணாமலை மாவட்டம் 81.86 சதவீதம் எஸ்ஐஆர் பணிகளை நிறைவு செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து 2 முதல் 10 இடங்களில் பெரம்பலூர் மாவட்டம் 80.74 சதவீதம், கன்னியாகுமரி 77.69 சதவீதம், தர்மபுரி 76.54 சதவீதம், திருச்சி 72.13 சதவீதம், அரியலூர் 72.1 சதவீதம், தஞ்சாவூர் 69.55, ராணிபேட்டை 68.33 சதவீதம், விழுப்புரம் 67.81 சதவீதம், ராமநாதபுரம் 67.52 சதவீதம் என முதல் 10 இடங்களில் உள்ளன.
50.4 சதவீதம் பணிகளை நிறைவு செய்து கோயம்புத்தூர் 37வது இடத்திலும், 45.36 சதவீதம் பணிகளை நிறைவு செய்து சென்னை கடைசியாக 38வது இடத்திலும் உள்ளன.
பொதுவாக நகர் பகுதிகளில் வேலை, தொழில் நிமித்தமாக தங்கியிருக்கும் வாக்காளர்கள் இடம் பெயர்வு அதிகம் இருப்பதால், மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் மற்றும் தொழில் வளர்ச்சி கண்ட திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கி, திரும்பப் பெறுவதில் கடும் சவால் இருப்பதாக களத்தில் உள்ள பிஎல்ஓக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
டிச.4-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடைமுறையில் உள்ள சவால்களை கருத்தில் கொண்டு இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.